'தளபதி 66' படத்தில் நடிப்பது உண்மையா? நடிகர் மோகன் விளக்கம்
- IndiaGlitz, [Thursday,April 21 2022]
தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66’ திரைப்படத்தில் நடிப்பது உண்மையா? என நடிகர் மோகன் விளக்கமளித்துள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தில்ராஜூ தயாரிப்பில், தமன் இசையில் உருவாகி வரும் திரைப்படம் 'தளபதி 66’ . இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்ததை அடுத்து விரைவில் அடுத்த கட்டப்படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தில் விஜய்யின் தந்தையாக சரத்குமாரும், விஜய்யின் இரண்டு சகோதரர்களாக 90களில் பிரபலமாக இருந்த இரண்டு நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய்யின் சகோதரர்களில் ஒருவராக சில்வர் ஜூப்ளி ஸ்டார் மோகன் நடிக்க இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது.
இதுகுறித்து நடிகர் மோகன் விளக்கம் அளித்தபோது, ‘'தளபதி 66’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், ‘ஹரா’ என்ற படத்தில் மட்டுமே தற்போது நடித்து வருகிறேன் என்றும், இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படம் குறித்து யோசிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கதாநாயகனாக மட்டுமே நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து 'தளபதி 66’ திரைப்படத்தில் மோகன் நடிக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.