வீட்டுக்காவலில் நடிகர் மோகன்பாபு? ஆந்திராவில் பரபரப்பு
- IndiaGlitz, [Friday,March 22 2019]
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டியின் ஆட்சியின்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக கல்லூரிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய தொகை பாக்கி, அதிகரித்துள்ளதாகவும் ஒருசில தனியார் கல்லூரிகள், அரசு கட்டணத்தை தரவில்லை என்பதால் மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் கல்வியாளரும் நடிகருமான மோகன்பாபுவின் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் அரசு சுமார் ரூ.20 கோடி கல்விக்கட்டணம் பாக்கி வைத்துள்ளதாம். இதுதொடர்பாக அரசிடம் பலமுறை அணுகியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் மோகன்பாபு திருப்பதியில் உள்ள அவரது கல்லூரி வளாகத்தில் மாணவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்த போராட்டத்தில் மோகன்பாபுவின் மகன்கள் விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன் காரணமாக, திருப்பதி-பிலெரு சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
மேலும் மோகன்பாபு இன்று நடைபெறவிருந்த பேரணி ஒன்றிலும் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் மோகன்பாபுவை காவல்துறையினர் வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இதனால் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவியதால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.