பாஜகவில் இணைந்தார் 80, 90களின் பிரபல ஹீரோ!
- IndiaGlitz, [Sunday,March 07 2021]
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளில் திரையுலகினர்கள் இணையும் நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது கடந்த 80 மற்றும் 90களில் பிரபலமான ஹீரோவாக இருந்த நடிகர் ஒருவர் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அவர்தான் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி.
கடந்த 1976ம் ஆண்டு Mrigayaa என்ற பெங்காலி திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிதுன் சக்கரவர்த்தி. முதல் படத்திலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் என்பதும் தற்போது கூட அவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
70 வயதான மிதுன் சக்கரவர்த்தி ஏற்கனவே மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் இருந்தவர் என்பதும் முன்னாள் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது திடீரென அவர் பாஜகவில் இணைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்துக்காக கொல்கத்தா வந்த நிலையில் அவரது முன்னிலையில் பாஜகவில் தன்னை மிதுன் சக்கரவர்த்தி இணைத்துக்கொண்டார்.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மிதுன் சக்கரவர்த்தியின் இணைப்பு அம்மாநிலத்தில் பாஜகவுக்கு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.