என் மனைவி இன்று உயிருடன் இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான்.. நா தழுதழுக்க சொன்ன பிரபல நடிகர்..!

  • IndiaGlitz, [Wednesday,March 06 2024]

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் தனது மனைவி இன்று உயிரோடு இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் நா தழுதழுக்க கூறி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை, குணச்சித்திர கேரக்டர்களில் மட்டுமின்றி ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது மனைவிக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாகவும் கிட்டத்தட்ட 15 லட்சம் செலவாகும் என்று கூறப்பட்ட நிலையில் நானும் எனது மகன்களும் இடிந்துபோய் உட்கார்ந்து விட்டோம்’ என்றும் கூறினார்.

’ஏற்கனவே நிறைய கடன் இருக்கும் நிலையில் இன்னும் கடன் வாங்க முடியாது என்று நினைத்து நாங்கள் எல்லோரும் வருத்தத்தில் இருந்த நிலையில்தான் ‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்புக்கு சென்று இருந்தேன். அப்போது என் மனைவிக்கு ஏற்பட்ட நிலையை நான் உதவி இயக்குனர்களிடம் பகிர்ந்த நிலையில் ரஜினி அவர்களுக்கு இது எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை.

அவர் என்னை உடனே கூப்பிட்டார். உங்கள் மனைவிக்கு உடல்நிலை சரியில்லையாமே. செலவுக்கு பணம் இல்லை என்று சொன்னீர்களாமே’ என்று கேட்ட அவர் உடனடியாக 15 லட்சம் ரூபாய் எடுத்து கொடுத்தார். இந்த பணத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் வேண்டுமென்றாலும் என்னிடம் தாராளமாக கேட்கலாம், ஒரு சகோதரர் கொடுத்தால் நீங்கள் வாங்கிக் கொள்ள மாட்டீர்களா? என்று அவர் கூறிய போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். இன்று என் மனைவி உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு ரஜினி அவர்கள் தான் காரணம் என்றும் நெகிழ்ச்சியுடன் அந்த பேட்டியில் லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.