இளைஞர்கள் போராட்டத்திற்கு உதவிய மீனவர்களுக்கு லாரன்ஸ் செய்த உதவி
- IndiaGlitz, [Friday,January 27 2017]
உலகமே வியக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்து, ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை இயற்ற வைத்த மாணவர்கள், இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த அறவழி போராட்டம் உலகிற்கே ஒரு வழிகாட்டியாக வருங்காலத்தில் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த போராட்டத்தின் கடைசி தினத்தில் விரும்பத்தகாத வன்முறை ஏற்பட்டதால் இளைஞர்களுக்கு உதவி செய்த மெரீனா பகுதிக்கு அருகில் குடியிருக்கும் மக்கள் பெரிதாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நடுக்குப்ப மீனவர்களின் மீன் சந்தை தீ வைக்கப்பட்டதோடு, அவர்களுடைய வீடுகள் பலவும் தீக்கிரையாகின.
இந்நிலையில் தீயால் பாதிப்பு அடைந்த மீனவர்களுக்கு இன்னும் அரசாங்கமே உதவி குறித்த அறிவிப்பு எதையும் விடுக்காத நிலையில் நடிகர் லாரன்ஸ் மீனவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார். முதல்கட்டமாக ரூ.10 லட்சம் தருவதாக அவர் அறிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு சட்டம் கொண்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நேரில் சென்று நன்றிக் கூற நேரம் கேட்டுள்ளதாகவும், மாணவர் புரட்சியின் வெற்றியை கொண்டாட மத்திய, மாநில அரசுகளிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அவர் சமீபத்தில் விடுத்த வீடியோ செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். லாரன்ஸ் அவர்களின் நிதியுதவிக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.