ஒரு முதல்வரிடம் எதிர்பார்ப்பதை ரஜினியிடம் எதிர்பார்ப்பது சரியா? கருணாகரன்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தூத்துகுடி மற்றும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது 'தூத்துகுடி கலவரத்திற்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றும் போராட்டம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் தமிழகம் சுடுகாடாகிவிடும் என்றும் கூறினார்.

ரஜினியின் இந்த கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிப்பவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பதிவு செய்யப்பட்டன. பொதுமக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியயதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் கருணாகரன் தனது சமுக வலைத்தளத்தில், ரஜினியின் பேச்சின் முழுமை வேறு ஒரு வித்தியாசமான பார்வையைக் கொண்டுள்ளது. அவரிடம் நாம் ஒரு முதல்வரிடம் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக எதிர்பார்க்கின்றோம். இந்த அளவுக்கு அவரை விமர்சனம் செய்ய தேவையில்லை' என்று கூறியுள்ளார்

கருணாகரனின் இந்த கருத்தை ஆமோதித்துள்ள நடிகர் விஷ்ணுவிஷால், நீங்கள் கூறியுள்ளது முற்றிலும் சரி. ரஜினிகாந்த் அவர்கள் பேச்சில் எனக்கு தவறாக ஒன்றும் தெரியவில்லை. அவர் துல்லியமாக பேசியுள்ளார். எலோரும் ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நல்ல விஷயங்கள் நடைபெற காலதாமதமாகலாம் அதற்கு அதிக மெனக்கிடுதலும் தேவை. ஆனால், தவறான சம்பவங்கள் ஒரே ஒரு நொடியில் நடந்துவிடும். வாழ்க்கை ஒவ்வொருவர் பார்வையிலும் வேறுபடும். நாம் அனைவரும் இந்த நேரத்தில் நல்லது செய்ய ஒன்றுபடுவோம். விமர்சனங்களைப் புறந்தள்ளி சண்டையிடுவதை நிறுத்துவோம்' என்று கூறியுள்ளார்.