மீண்டும் அரசியல் களத்தில் குதித்த பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாத அரசியல் களத்தில் வெற்றிடத்தை நிரப்புவதாக கூறிக்கொண்டு கோலிவுட் திரையுலகினர் பலர் அரசியல் களத்தில் குதித்து வருகின்றனர். கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால், டி.ராஜேந்தர் ஆகியோர் புதியதாக அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் ஏற்கனவே அரசியல் களத்தில் தேர்தலின்போது மட்டும் தலைகாட்டும் நடிகர் கார்த்திக், மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்ற ஒரு அர்சியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலிலும் போட்டியிட்டு வந்த கார்த்திக், தற்போது கட்சியின் பெயரிலும் நிர்வாகிகளிலும் மாற்றத்தை கொண்டு வந்து புத்துணர்ச்சியுடன் அரசியலில் குதிக்க முடிவு செய்துள்ளதாக நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது மரியாதை நிமித்தமாக பல கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் இருந்ததாகவும், இனி அரசியலில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை என்றும் முழுவீச்சில் அரசியலில் குதிக்கவுள்ளதாகவும், தனது புதிய கட்சியின் பெயரை இன்னும் மூன்று நாட்களில் அறிவிக்கவிருப்பதாகவும் நடிகர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.