சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? பசுமை சாலை குறித்து கார்த்தி

  • IndiaGlitz, [Thursday,June 28 2018]

சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் எதிர்ப்புகளை மீறி அரசு இந்த சாலை அமைப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த திட்டத்திற்கான களப்பணிகளையும் அரசு தொடங்கிவிட்டது. இந்த திட்டம் குறித்து எதிர்மறை கருத்து கூறினாலோ அல்லது போராட்டம் செய்தாலோ கைது செய்யப்படும் சுழ்நிலை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

விவசாய நிலம் மற்றும் பசுமைக்காடுகளை அழித்துவிட்டு பசுமைச்சாலை தேவையா? என்று அரசியல் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் விவசாயிகள் குறித்த படமான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தி இந்த திட்டம் குறித்து தனது காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இந்த திட்டம் குறித்து கூறியதாவது:

விழுப்புரம் வழியா ஒண்ணு, ராணிப்பேட்டை-தர்மபுரி வழியா இன்னொண்ணுன்னு சென்னையில இருந்து சேலத்துக்குப் போக ஏற்கெனவே இரண்டு வழிகள் இருக்கு. இந்த இரண்டு சாலைகளையும் விரிவாக்கம் பண்ணலாமே, எதுக்குப் புதுச்சாலை? அப்படிப் புதுச்சாலை போடுற அளவுக்கு சேலத்தில் அப்படி என்ன தேவை இருக்கு? விவசாய நிலங்களையும், 30 கிலோமீட்டருக்குக் காட்டையும் அழிச்சு இந்தச் சாலையை அமைக்கிறதா சொல்றாங்க. அது அவசியமே இல்லை! என்று கூறியுள்ளார்.

மேலும் கமல், ரஜினி இருவரும் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலலில் இருவரும் போட்டியிடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருப்பதாகவும் கார்த்தி அந்த பேட்டியில் தெரிவித்தார்.