ஒரு அப்பாவின் மன்றாடல் இது… டிவிட்டரில் உலகநாயகன் வைத்த முக்கிய வேண்டுகோள்!
- IndiaGlitz, [Tuesday,October 12 2021]
தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக விளங்கும் உலகநாயகன் கமல்ஹாசன் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தன்னுடைய டிவிட்டரில் முக்கியக் கருத்து ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ளார். இது சோஷியல் மீடியாவில் தனிக்கவனம் பெற்று தற்போது வைரலாகி வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உலகெங்கிலும் உள்ள இளம் பெண்களின் குரல்களை வலுப்படுத்தவும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் பிரபலங்கள் பலரும் இந்த நாளில் பெண்களுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் நடிகை அக்ஷரா ஹாசன் எனும் இரு பெண் குழந்தைகளுக்கு தகப்பனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஒரு அப்பாவாக தனது வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அதில், “ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது” என்று நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்“ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தவிர விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் “பிக்பாஸ்“ நிகழ்ச்சியும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 11, 2021