நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நடிகர் இளவரசு.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,January 30 2024]
நீதிமன்றத்தில் பொய் சொல்லக்கூடாது என நீதிபதி கண்டித்ததை அடுத்து நடிகர் இளவரசு நீதிமன்றத்தில் இன்று மன்னிப்பு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் நடிகர் இளவரசு ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நான்கு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பல ஆண்டுகள் ஆகியும் விசாரணை முடியவில்லை.
இதனை அடுத்து இளவரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக கூறி அது தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சியும் காவல்துறையினரால் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆனால் டிசம்பர் 13ஆம் தேதி தான் ஆஜராகி வாக்குமூலம் அணிந்ததாகவும் டிசம்பர் 12ஆம் தேதி ஒரு படப்பிடிப்பில் இருந்ததாகவும் இளவரசு கூறினார். ஆனால் டிசம்பர் 12ஆம் தேதி அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் அன்றே அவர் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் என்றும் இதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கூறினால் ஏற்றுக் கொள்வோம் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். இதனையடுத்து இன்று நடந்த விசாரணையில் தவறான தகவல் அளித்ததாக இளவரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கூறியுள்ளார்.