சீயான் விக்ரமின் 25 ஆண்டுகள். ஒரு சிறப்பு பார்வை
- IndiaGlitz, [Saturday,October 17 2015]
தமிழ்த்திரையுலகில் தான் நடிக்கும் ஒரு கேரக்டருக்காக தன்னையும் தனது உடலையும் வருத்தி, அந்த கேரக்டராக மாறும் ஒரே நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை. இந்த வகையில் கமல்ஹாசனின் கலையுலக வாரீசாக அவரைப்போலவே கேரக்டருக்காக தன்னை அர்ப்பணித்த நடிகர் என்றால் அது விக்ரம் மட்டுமே. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து வரும் விக்ரம் திரையுலகிற்கு வந்து இன்றோடு 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 25 வயது இளைஞன் போல் தோற்றமளிக்கும் விக்ரம், சினிமாவுக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறினால் நம்புவதற்கு கூட கொஞ்சம் கஷ்டமாகத்தான் பலருக்கு இருக்கும்
கடந்த 1990ஆம் ஆண்டு டி.ஜே.ஜாய் இயக்கத்தில் வெளிவந்த 'என் காதல் கண்மணி' என்ற திரைப்படம்தான் விக்ரம் அறிமுகமான படம். இதையடுத்து ஸ்ரீதரின் இயக்கத்தில் 'தந்துவிட்டேன் என்னை', எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 'காவல் கீதம்' போன்ற படங்களில் விக்ரம் நடித்திருந்தாலும், அவருக்கு ஓரளவுக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய 'மீரா'. இளையராஜாவின் இனிய பாடல்கள் அமைந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனாலும் விக்ரம் ஆரம்பகாலகட்டங்களில் பல சோதனைகளையும், தோல்விகளையும் வேதனைகளையும் அவமானங்களையும் சந்தித்தவர். இருப்பினும் மனம் தளராது உறுதியுடன் நின்றதால் இன்று ஒரு வெற்றி பெற்ற நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
அஜீத்துடன் நடித்த 'உல்லாசம்', பார்த்திபன் இயக்கி நடித்த 'ஹவுஸ்புல்' போன்ற படங்களில் சிறப்பு வேடங்களில் நடித்த விக்ரமுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் இயக்குனர் பாலாவின் 'சேது'. பாலாவின் அறிமுகப்படமான இந்த படத்தில் விக்ரம், 'சேது' என்ற கேரக்டருக்காக 15 கிலோ உடலை குறைத்து அந்த கேரக்டராக வாழ்ந்து காட்டினார். இந்த படத்திற்கு பின்னர்தான் அவரது பெயருக்கு முன்னாள் 'சீயான்' என்ற பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டது.
பாலாவின் பார்வை பட்டவர்கள் யாரும் சோடை போவதில்லை என்ற கோலிவுட் சொல்லிற்கேற்ப, சேதுவுக்கு பின்னர் விக்ரம் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். அவர் நடித்த தில், ஜெமினி, தூள், சாமி ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடைந்து வெற்றி நாயகனாக வலம் வந்தார். இதன்பின்னர் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் அவர் நடித்த 'பிதாமகன்' வியாபார ரீதியில் வெற்றி பெற்றது மட்டுமின்றி அவருக்கு தேசிய விருதும் பெற்று தந்தது.
பின்னர் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் 'அந்நியன்' படம் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. விக்ரமை நம்பி பெரிய பட்ஜெட் படங்களையும் எடுக்கலாம் என தயாரிப்பாளர்களுக்கு தைரியத்தை கொடுத்தது அந்நியன்' திரைப்படம்தான்.
மேலும் சுசிகணேசன் இயக்கத்தில் 'கந்தசாமி', மணிரத்னம் இயக்கத்தில் 'ராவணன், விஜய் இயக்கத்தில் 'தெய்வத்திருமகள் மற்றும் தாண்டவம்' ஆகிய படங்கள் விக்ரமை உச்சத்திற்கு அழைத்து சென்றது. பின்னர் மீண்டும் ஷங்கருடன் 'ஐ' படத்தில் இணைந்த விக்ரம், அந்த படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அதன்பலனாக 2015ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படம் 'ஐ' என்ற பெருமை கிடைத்தது.
தற்போது '10 எண்றதுக்குள்ள' என்ற ஆக்சன் படத்தில் நடித்துள்ள விக்ரம், இன்னும் பல வருடங்கள் ஆக்சன் படங்கள் மட்டுமின்றி அவரது நடிப்பிற்கு தீனிபோடும் வகையில் விதவிதமான நடிப்பை வெளிப்படுத்தும் திரைப்படங்களில் நடிக்க, இந்த 25வது வருடத்தில் அவரை வாழ்த்துகிறோம்.