கருணாசுக்கு திருவாடனை தொகுதி மக்கள் தெரிவித்த எதிர்ப்பு.
- IndiaGlitz, [Saturday,February 25 2017]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ஆட்சி பொறுப்பை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ள போதிலும் மதில் மேல் பூனையாகத்தான் ஆட்சியின் நிலை உள்ளது. 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தற்போது 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அரசுக்கு உள்ளது. 5 எம்.எல்.ஏக்கள் தடம் மாறிவிட்டால் ஆட்சி அம்போதான்.
இந்நிலையில் அரசுக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் கோடிக்கணக்கான பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் வெறுப்பில்தான் உள்ளார்கள் என்பது சமீபத்திய சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது.
இந்த நிலையில் எனக்கு ஓட்டு போட்டவர்கள் 75000 பேர்கள் தான். எனவே எனக்கு ஓட்டு போடாத ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னிடம் கேள்வி கேட்க உரிமை இல்லை என்று பக்குவமற்ற முறையில் நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் பேசி வருகிறார். மூத்த அமைச்சர்களே மக்களின் அதிருப்தி குறையும் வரை அடக்கி வாசித்து வரும் நிலையில் முதன்முதலில் எம்.எல்.ஏ ஆகியுள்ள கருணாஸ் முதிர்ச்சியற்ற நிலையில் பேசி வருவது அதிமுக தொண்டர்களையும், பொதுமக்களையும் வெறுப்படைய செய்துள்ளது.
இந்நிலையில் நேற்று தொகுதிக்கு சென்ற கருணாசுக்கு பொதுமக்கள் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற கருணாசை மாலை போட விடாமல் விரட்டி அடித்ததாகவும் செய்திகள் வந்துள்ளது.
இனிமேலாவது கருணாஸ் தொகுதி மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு, ஓட்டு போட்டவர்களுக்கு மட்டுமின்றி தொகுதி மக்கள் அனைவருக்கும் தான் பொதுவானவர் என்ற முறையில் செயல்படுவது அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது என்பது நம்முடைய தாழ்மையான வேண்டுகோள்