மும்மொழி, இருமொழி கொள்கை ஏமாற்று, மோசடி: ஒருமொழி கொள்கையே போதும்: தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Monday,August 03 2020]

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று புதிய கல்வி திட்டத்தின் படி மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் சற்றுமுன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’தமிழகத்தில் மும்மொழி கொள்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் மாண்புமிகு அம்மாவின் அரசின் கொள்கையான இரு மொழிக் கொள்கைதான் அமல்படுத்தப்படும் என்றும் மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்பு வேதனையை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இருமொழி கொள்கை மற்றும் மும்மொழி கொள்கை குறித்து நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் தனது பாணியில் விமர்சனம் செய்துள்ளார். மும்மொழிக்கொள்கை என்பது மோசடி என்றும், இரு மொழிக் கொள்கை என்பது ஏமாற்று என்றும் கூறிய அவர் ஒருமொழிக் கொள்கையே உரிமை கொள்கை என்பதை எதிர்கால நாம் நிலைநிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தமிழை மட்டுமே நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்றும் தமிழ் என்ற ஒருமொழி கொள்கையையே தமிழக அரசு பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கருணாசின் இந்த கருத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.