கூவத்தூரில் ரூ.10 கோடி கொடுக்கப்பட்டதா? கருணாஸ் விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,June 13 2017]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக ஏற்கனவே பல புலனாய்வு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று கூவத்தூரில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்களுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.6 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும், குறிப்பாக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களான தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர்களுக்கு ரூ.10 கோடி வரை கொடுக்கப்பட்டதாகவும் எம்.எல்.ஏ. சரவணன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.ஏவுமான கருணாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: கூவத்தூரில் எனது நண்பரின் விடுதியில் தங்கியிருந்த நான் கூட்டம் என்றதால்தான் அவர்களோடு கலந்துகொண்டேன். எனது தொகுதியில் கண்மாய் தூர்வார வேண்டும். அதற்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள், என் தொகுதியில் அனைவருக்கு குடிநீர் கிடைக்க உதவுங்கள் என்றுதான் அமைச்சர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். தவிர எனது தேவைக்காகவோ, எனது அமைப்பின் தேவைக்காகவோ யாரிடமும் நான் பணம் கேட்டதும் இல்லை, வாங்கியதும் இல்லை. அப்படியிருக்க நான் பணம் வாங்கியதாக அபாண்டமான பொய்யை, எம்.எல்.ஏ., சரவணன் கூறியுள்ளார். அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்' என்று தெரிவித்துள்ளார்.