தினகரன் வாய்தான் அவருக்கு எதிரி. நடிகர் ஆனந்த்ராஜ்
- IndiaGlitz, [Tuesday,April 18 2017]
பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் ஆனந்த்ராஜ் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகி சசிகலா அணியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் 'இரட்டை இலை' சின்னத்திற்கு டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்த விவகாரம், அதிமுகவின் இரு அணிகள் இணைவது குறித்து ஆனந்த்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், ஒரு நாளைக்கு பலபேர் எனக்கு தொடர்பு கொண்டு பேசுவார்கள். அதில் யாராவது இந்த வேலையை செய்வேன் என்று சொல்லியிருப்பார்கள். முடிந்தால் இதை செய்யுங்கள் என்று நான் சொல்லியிருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் பதில் கூறி உள்ளார். இதனால் அவர் அளித்த பதிலே அவருக்கு எதிரான சாட்சியாக அமைந்து விட்டது.
ஒரு தொகுதிக்கு பல கோடி ரூபாயை செலவு செய்ததை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து அந்த தொகுதி தேர்தலை ரத்து செய்து இருக்கிறது. பல கோடி ரூபாயை கொடுத்து உரிமையை பெறுகிற எண்ணத்தில் இருக்கிற குடும்பத்தை சார்ந்தவர்கள், கட்சியில் உண்மையாக உழைத்த, மூத்த நிர்வாகிகளுக்கு இதுபோன்று செலவு செய்வார்களா?. இந்த பணம் அனைத்தும் அவர்களுக்கு எங்கே இருந்து வந்தது? என்பதை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.
கொங்கு மண்டலம் தான் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது முதல் அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்தான். கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். தற்போது கட்சியில் இருக்கும் சூழ்நிலையை பார்த்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்களின் வருத்தத்தை போக்கும் கடமை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. எனவே இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் நல்ல முடிவு எடுத்து, கட்சி வேறு, குடும்பம் வேறு என்பதை நிரூபிக்க வேண்டும்.
இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டும் என்பது தான் மக்களின் கருத்து. எனவே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்ப தாக தற்போது பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்' என ஆனந்த்ராஜ் கூறியுள்ளார்.