விதிமுறை மீறினால் திரையரங்கின் உரிமம் ரத்து: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை!
- IndiaGlitz, [Friday,January 15 2021]
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என அரசு விதிமுறை விதித்துள்ள நிலையில் இந்த விதிமுறையை மீறினால் திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்பி திரையரங்குகளை இயக்கலாம் என தமிழக அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது. 100% இருக்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்தும் இன்னும் அதற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான பொங்கல் திரைப்படங்களில் பல திரையரங்குகளில் விதிமுறைகளை மீறி 100% இருக்கைகளை இருக்கைகளை நிரப்பியதாக காவல் துறைக்கு புகார்கள் வந்துள்ளது. ஒரு சில திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று பேட்டியளித்த சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், ‘திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் இந்த விதியை மீறினால் திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்களின் இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.