மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீடு… தமிழக அரசின் அதிரடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
MBBS, BDS உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) குறித்த விவாதம் தமிழகத்தில் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவத்தில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த உள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சேர்க்கையில் உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
கடந்த ஜுலை மாதம் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால் தமிழகத்தின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது தனியார் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயின்று பிறகு அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கும் இந்த உள் இட ஒதுக்கீடு பொருந்தும் எனவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இத்திட்டத்திற்காக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பெறப்பட்ட ஒப்புதலை அடுத்து விரைவில் அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்து இருந்தது. அதுவும் நடப்பு ஆண்டிலேயே 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக அமைச்சரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த ஏற்பாட்டினால் தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout