தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரருக்கு ஜாமீன்.. ஆனால் நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!
- IndiaGlitz, [Friday,October 06 2023]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் பண மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனையும் விதித்துள்ளது.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் புகார் அளித்திருந்தார். நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க இருப்பதாகவும், ரூ.200 கோடி மதிப்புள்ள அந்த திட்டத்தில் முதலீடு செய்தால் இருமடங்கு லாபம் வரும் என்று ஆசை வார்த்தை கூறி தன்னிடம் பண மோசடி செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த மாதம் 7ஆம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்தனர். இந்த நிலையில் இருமுறை ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது ரவீந்தர் இரண்டு கோடி ரூபாய் திருப்பி தந்து விட்டதாக கூறுவது தவறு என்றும் அவர் பணம் தரவில்லை என்றும் புகார்தாரரின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை அடுத்து அவரது வங்கி ஆவணங்களை சரிபார்க்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இன்றைய விசாரணையில் ரவீந்தர் வங்கி கணக்கில் இருந்து பல பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதால் அவை அனைத்தும் இந்த வழக்கிற்கு தொடர்புடையதா என தெரியவில்லை என்று வழக்கறிஞர் கூறினார். இதனை அடுத்து பண பரிவர்த்தனை தொடர்பான முழு விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் சந்திரசேகர் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.