தூற்றியவர்களுக்கு மத்தியில் சாதித்த தமிழன்- மூலிகை பெட்ரோல் உற்பத்திக்கு வேறு மாநிலத்தில் அனுமதி!!!
- IndiaGlitz, [Wednesday,September 09 2020]
தமிழகத்தைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மூலிகைப் பொருட்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்ற தனது புதிய கண்டுபிடிப்பைக் குறித்து ஊடகங்கள் மத்தியில் பரபரப்பாக பேசி வந்தார். இந்நிலையில் இவரது கண்டுபிடிப்புக்கு பல தரப்புகளில் இருந்தும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மேலும் இவரது கண்டுபிடிப்பு போலியானவை என்று மத்தியப் புலனாய்வு அமைச்சம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தது. இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று ராமர் பிள்ளை பின்னர் விடுவிக்கப் பட்டார்.
இந்நிலையில் தான் கண்டுபிடித்த மூலிகை பெட்ரோலை கேரளா அரசாங்கம் உற்பத்தி செய்து விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது என்ற தகவலை ராமர்பிள்ளை வெளியிட்டுள்ளார். கேரளாவில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதியில் இருந்து உற்பத்தித் தொடங்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கிறார். இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு மாநில மற்றும் மத்திய அரசு விதித்து இருக்கும் அதிக படியான வரியே காரணம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தைச் சார்ந்த ராமர் பிள்ளை பல ஆண்டுகளாக மூலிகை பெட்ரோல் உற்பத்தியைக் குறித்து கருத்து கூறிவருகிறார். ஆனால் அவரது திட்டத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையும் இருந்து வந்தது. மேலும் சிலர் இவரது மூலிகை பெட்ரோல் திட்டம் போலியானது எனவும் விமர்சனம் வைத்து வந்தனர். பல வருடங்களாக தொடர்ந்த இந்த சர்ச்சைக்கு இப்போது விடிவு கிடைத்து இருப்பதாக ராமர் பிள்ளை மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார்.
மதுரையைச் சேர்ந்த இவர் செப்டம்பர் 4 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். அதில் விவசாய கழிவுகள், கழிவு நீர் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து பயோ பெட்ரோல், பயோ டீசல் மற்றும் பயோ சமையல் எரிவாயு ஆகியவற்றை தயாரித்துள்ளதாக ராமர் பிள்ளை தெரிவித்து இருககிறார்.
மேலும் இவரது கண்டுபிடிப்புக்கு கேரளா அரசாங்கம் அனுமதி அளித்து இருப்பதாகவும் இதனால் மூலிகைப் பெட்ரோல் தயாரிப்பு வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார். இதற்காக மூணாறு பகுதியில் சுமார் 1,600 ஏக்கர் பரப்பளவில் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.