கின்னஸ் குயின் ஆச்சி மனோரமா சாதனைகள்… வியப்பூட்டும் தொகுப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிப்பிற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகை ஆச்சி மனோரமாதான். காரணம் 5,000 க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், 1,500 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், தேசிய விருது, பத்ம ஸ்ரீவிருது, கின்னஸ் ரெக்கார்ட், கலைமாமணி, ஃபிலிம்பேர் விருது என இவரது பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லும் அளவிற்கு ஒரு மகத்தான கலைஞராக வாழ்ந்து உள்ளார்.
மேலும் எத்தனை நீளமான டயலாக்கை கொடுத்தாலும் மனோரமா ஒரே மூச்சில் மனனம் செய்து அதை உணர்ச்சிப் பொங்க வெளிப்படுத்தி விடுவாராம். அதோடு என்.டி.ராமாராவ், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர், அண்ணா என 5 முதல்வர்களுடன் பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. சிவாஜி, ஜெய் சங்கர், எஸ்எஸ் முத்துராமன், சத்தியராஜ், முரளி, கமல், ரஜினி, விஜய் என 3 தலைமுறை நடிகர்களோடு நடித்தப் பெருமைக்கும் சொந்தக்காரர். குணச்சித்திரம், துணை நடிகை, நகைச்சுவை என எந்த கேரக்டரிலும் பொருந்தி போகிற மகத்தான நடிப்புத் திறமையும் இவருக்கு உண்டு.
கடந்த 1937 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்த கோபி சந்தாவை முதன் முதலாக எஸ்எஸ்ஆர் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தத் திரைப்படம் வெளிவராத நிலையில் கவிஞர் கண்ணதாசன் தயாரித்த “மாலையிட்ட மங்கை“ திரைப்படத்தில் “மனோரமா” என்ற பெயருடன் அறிமுகமானார். பின்னர் இவரது சினிமா வாழ்க்கை அனைத்திலும் வெற்றி மகுடம்தான்.
“வா வாத்தியாரே வூண்டாண்ட” என சென்னை பாஷையிலும் பேசி இருக்கிறார், “தெரியாதோ நோக்கு” என அக்கிரகாரத்து மாமி போலவும் அசத்தி இருக்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் “முத்துக்குளிக்க வாரியளா” என தூத்துக்குடியையும் தூக்கிச் சாப்பிட்டு இருக்கிறார். தனது 20 வயதில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த மனோரமா தனது இறப்பு வரையிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருந்தார்.
நடிப்பை தவிர இவர் பாடல்களையும் பாடியுள்ளார். மேடை நாடகத்தில் பழகிய குரல் வளம் சினிமாவிலும் ஒலித்தது. சிவாஜியுடன் தில்லானா மோகனாம்பாள் படத்தில் வந்த ஜில்ஜில் ரமாமணி கதாபாத்திரம் இவருக்கு ஆச்சி என்ற பெயரை பெற்றுத் தந்தது. சொந்த ஊரும் காரைக்குடி என்பதால் இவருக்கு அப்படி ஒரு பெயர் பொருத்தம். 78 வருட உலக வாழ்க்கையில் கிட்டத்தட்ட 58 வருடத்தை சினிமாவிலேயே கழித்துவிட்டு போன ஒரு மாபெரும் சரித்திர நாயகிதான் இந்த ஆச்சி மனோரமா.
இவரது நடிப்புக்காக மத்திய அரசு பத்ம ஸ்ரீவிருது கொடுத்து கவுரவித்துள்ளது. நிறைய சினிமாவில் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் கின்னஸ் குயினாகவும் அறியப்படுகிறார். மேலும் தமிழக அரசின் கலைமாமணி விருது, பல ஃபிலிம்பேர் விருது, கேரள அரசின் கலா சாகர் விருது, மலேசிய அரசின் டத்தோ சாமுவேல் சரித்திர நாயகி விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான அண்ணா விருது, ஜெயலலிதா விருது, எம்ஜிஆர் விருது, என்எஸ்கே விருது எனப் பல விருதுகளை வாங்கி குவித்து இருக்கிறார்.
அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும், நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த ஒரு சின்ன கதாபாத்திரத்திலும் தனக்கான அடையாளத்தை பதிவு செய்துவிட்டு சென்று இருக்கிறார். இதனால் ஆச்சி மனோரமா இன்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இவரது இமாலய சாதனைகளை நினைத்து அந்த ரசிகனும் வியப்படைந்து கொண்டு இருக்கிறான். இன்றைய தினம் அவருடைய 84 ஆவது பிறந்த தினம் என்பதும் இந்த தினத்தில் அவருடைய பெருமையை மீண்டும் நினைவு கூர்ந்து உள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments