ரஜினிகாந்த் அரசியலை புரிந்து கொள்ள இன்றைய அரசியல்வாதிகளுக்கு தகுதியில்லை: பொன்ராஜ்
- IndiaGlitz, [Friday,March 13 2020]
அரசியலுக்கு வரும் நடிகர்கள் உட்பட அனைவரும் முதல்வர் கனவுடன் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் பதவியை தன்னைத் தேடிவந்த நிலையிலும் அதனை வேண்டாம் என்று மறுத்த ரஜினிகாந்தை அரசியல் விமர்சகர்கள் வித்தியாசமான பார்வையில் பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ், ரஜினியின் அரசியல் கருத்து குறித்து கூறியதாவது: ரஜினிகாந்தின் அரசியல் மாஸ்டர் ஸ்ட்ரோக் இன்று இருக்கக்கூடிய அரசியல்வாதிகள் யாருக்கும் சுத்தமாக புரியவே புரியாது. அதை புரிந்துகொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு தகுதியில்லை. இன்றைய அரசியல்வாதிகள் ரஜினியின் கருத்தை புரிந்து கொள்ள இன்னும் பல ஆண்டுகள் ஆகும். அப்படிப்பட்ட ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக்கை தான் அவர் பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே நான் அவரை பலமுறை சந்தித்துப் பேசியுள்ளேன். அப்போது என்னிடம் என்ன கருத்துக்கள் கூறினாரோ அதையேதான் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளிப்படையாகக் கூறினார். இன்றும் அதையேதான் அவர் கூறியுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பலம் பெற்றுள்ளது. ஒரு சில மாற்றங்களும் நடந்து உள்ளது. ஆனாலும் கூட அவர் 2017ஆம் ஆண்டில் என்ன கூறினாரோ, எந்த கொள்கை எடுத்தாரோ, சிஸ்டம் மாற வேண்டும் என்பதற்காக என்ன முடிவு எடுத்தாரோ, அந்த முடிவிலிருந்து ஒரு இன்ச் கூட அவர் பிறழாமல் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான ஒன்றாக நான் பார்க்கின்றேன்.
அரசியல் நிலைமையை இதைவிட தெளிவான பார்வையில் வேறு யாரும் கூற முடியாது, கூறியதாகவும் எனக்கு தெரியவில்லை. நான் அரசியலுக்கு வருகிறேன், வந்தால் என்னுடைய கட்சி இப்படித்தான் இருக்கும், என்னுடன் இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும், என்னுடைய கொள்கைகள் இப்படித்தான் இருக்கும், என்னுடைய ஆட்சிமுறை இப்படித்தான் இருக்கும் என்று இதுவரை யாராவது வெளிப்படையாக கூறி இருக்கிறார்களா? அந்த வகையில் அவரை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும் என்று பொன்ராஜ் கூறியுள்ளார்.