போதைப்பொருள் கடத்தல் வழக்கு: தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது..!
- IndiaGlitz, [Saturday,March 09 2024]
சமீபத்தில் டெல்லியில் 2000 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தலைமறைவாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் போதைப்பொருள் அதிகாரிகள் சற்று முன் ஜெய்ப்பூரில் ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சர்வதேச அளவில் கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர் திரையுலகினர் சிலருடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது. மேலும் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இறைவன் மிகப் பெரியவன்’ உட்பட சில படங்களை அவர் தயாரித்து வந்ததாகவும் அது மட்டும் இன்றி திமுகவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜாபர் சாதிக் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் திமுகவிலிருந்து அவர் நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இருந்தார் என்பதும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கைது செய்ததாகவும் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜாபர் சாதிக் கைது விவரங்களை இன்று மதியம் இரண்டு மணிக்கு பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.