எந்த பெற்றோருக்கும் எங்க துன்பம் வரக்கூடாது: அப்ரீனாவின் பெற்றோர் உருக்கம்
- IndiaGlitz, [Monday,September 18 2017]
நடிகைகள் டிஸ்கோசாந்தி, லலிதகுமாரியின் சகோதரரும், துணை இயக்குனருமான அருள்மொழிவர்மன் அவர்களின் மகள் அப்ரீனா கடந்த 8-ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் திடீரென காணாமல்போனார். இதனால் குடும்பமே நொறுங்கியது. அவரை பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அப்ரீனா சமீபத்தில் பெங்களூரில் இருந்ததாக கிடைத்த தகவலை அடுத்து அவரது பெற்றோர்கள் அப்ரீனாவை பெங்களூரில் இருந்து அழைத்து வந்தனர்.
வீடு திரும்பிய அப்ரீனாவின் மனநிலை குறித்து அருள்மொழிவர்மன் கூறியபோது, 'மனதளவில் அப்ரீனா இன்னும் பழைய நிலைக்கு திரும்பவில்லை. தனியாக பெங்களூர் வரை சென்றுள்ளார் என்றால் அவள் மனம் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எங்கள் அன்பில் கூட குறையிருக்கலாம். அப்படி இருந்தால் நாங்கள் அதை திருத்தி கொள்வோம். இப்போதைக்கு அவளிடம் எதுவும் கேட்கவில்லை. ஒருவாரம் போகட்டும். அவளாகவே பேசட்டும். அவள் நன்மைக்காக நாங்க செய்ய வேண்டியதை நிச்சயம் செய்வோம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர் என்று கூறினார்.
மேலும் ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளி என்பது இரண்டவது வீடு போல. பள்ளியில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்கு தெரியாது. அதை தெரிவிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் பள்ளி நிர்வாகத்திற்கு உண்டு. அப்ரீனா படிக்கும் பள்ளியில் 56 கேமிராக்கள் இருந்தும் அவர் பள்ளியில் இருந்து வெளியே போனது எந்த கேமிராவிலும் இல்லை. ஒரு கண்காணிப்பு கேமராவில் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருஷம் வரையிலான நிகழ்வுகள் சேமிக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும் இனியாவது அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டையும் குழந்தைகளின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதை உறுதி செய்ய வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட வலி இனி எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது .
மேலும் போலீஸ் நிர்வாகம், என் திரையுலக நண்பர்கள், நடிகர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் அப்ரீனாவை மீட்க உதவினார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி' என்று அருள்மொழிவர்மன் கூறினார்.