விஜய்யை பெரிய நடிகராக்கியது நாங்கள் தான்: அபிராமி ராமநாதன்
- IndiaGlitz, [Thursday,December 28 2017]
மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்திலும், ரவி மரியா, கலக்க போகுது யாரு புகழ் குரேஷி உள்பட பலர் நடித்த 'ஆறாம் திணண' திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட அபிராமி ராமநாதன், அமேசான் இணையதளத்தில் 15 நாட்களில் படங்களுக்கான உரிமையை கொடுத்து திரையரங்குகளை காலி செய்துவிட வேண்டாம் என வேண்டுகோள் வைத்தார். அவர் மேலும் கூறியதாவது:
திரையரங்குகள் பொன் முட்டையிடும் வாத்து. அதை தயாரிப்பாளர்கள் இழந்துவிட வேண்டாம். அமேசான் போன்ற இணையதளங்களுக்கு படத்தின் உரிமையை 10 அல்லது 15 நாட்களில் ஒருசில தயாரிப்பாளர்கள் கொடுத்து விடுகிறார்கள். இதனால் திரையரங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. 'ஆறாம் திணை' படம் பேய்ப்படம் என்றும் பேய் திடீரென காணாமல் போய்விடும் என்றும் கூறினார். அதேபோல் திரையரங்குகளும் ஒருநாள் காணாமல் காலியாகிவிடும் சூழ்நிலையை உண்டாக்க வேண்டாம். நான் தயாரிப்பாளர்களிடம் வைக்கும் ஒரு வேண்டுகோள் என்னவெனில் தயவுசெய்து அமேசான் போன்ற இணையதளங்களுக்கு ஒருவருடம் கழித்து உரிமையை கொடுங்கள்' என்று கூறினார்.
மேலும் விஜய் போன்ற நடிகர்கள் இன்று பெரிய நடிகராக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர் நடித்த படமும் சின்ன பட்ஜெட் படம் தான். அந்த சின்ன பட்ஜெட் படத்தை நாங்கள் திரையரங்குகளில் ஓட்டி, வெற்றிப்படமாக்கியதால்தான் இன்று அவர் ஒரு பெரிய நடிகராக உள்ளார். விஜய்யை மட்டுமல்ல அனைத்து பெரிய நடிகர்களுக்கும் இது பொருந்தும். எனவே சின்ன படங்களின் வெற்றி தான் ஆரோக்கியமானது. நானும் ஒருசில சின்ன பட்ஜெட் படங்களை எடுத்துள்ளேன், வெற்றி பெறும் வரை தொடர்ந்து படங்கள் எடுப்பேன். நான் தயாரிக்கும் படத்தை மக்கள் பாராட்டினால் அதில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது' என்று அபிராமி ராமநாதன் மேலும் கூறினார்.