மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த அப்துல் கலாமின் உதவியாளர்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒருபக்கம் அதிமுக கூட்டணி கட்சிகளும், இன்னொரு பக்கம் திமுக கூட்டணி கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்த இரண்டு கூட்டணிகள் போக தனியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் இப்போதைக்கு சரத்குமாரின் கட்சி மற்றும் பாரிவேந்தர் ஐஜேகே கட்சி ஆகியவை இணைந்து உள்ளன. இன்னும் ஒரு சில கட்சிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஏற்கனவே பழம்பெரும் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் சமீபத்தில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது அடுத்தபடியாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். கமல் கட்சியில் இணைந்ததும் செய்தியாளர்களை சந்தித்த பொன்ராஜ், ‘அப்துல் கலாம் பெயரில் தொடங்கிய கட்சியை பதிவு செய்ய விடாமல் இன்றுவரை தடுத்தது பாஜக அரசு. மேலும் கலாமின் அறிவார்ந்த அரசியல் காலத்தின் கட்டாயம்; அவர் கனவை நனவாக்க தொடர்ந்து உழைப்பேன்’ என கூறியுள்ளார்.

அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் இணைந்தது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.