கிரிக்கெட் இருந்து ஓய்வுபெறும் “மிஸ்டர் 360“… ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் உலகில் “மிஸ்டர் 360“, “சூப்பர் மேன்“, “360 டிகிரி பேட்ஸ்மேன்“ என்று பல்வேறு பட்டப்பெயர்களை சுமந்த ஏபி டி வில்லியர்ஸ் தனது ஓய்வை அறிவித்துள்ளார். முன்னதாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற இவர் தற்போது அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாகத் திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டி வில்லியர்ஸ் கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் முதன் முதலாக களம் இறங்கி விளையாடினார். அதைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணியை பலமுறை வெற்றிக்கு கூட்டிச்சென்றுள்ளார். மேலும் பவுலர்கள் இவரைப் பார்த்தாலே நடுங்கும் அளவிற்கு அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்தார்.

கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக அறியப்பட்ட இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருந்துவந்தனர். தன்னிடம் வரும் பந்து எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்வதில் வல்லவரான டி வில்லியர்ஸின் ஆட்டத்தைப் பார்க்கவே ஏராளமான ரசிகர்கள் ஆடுகளத்திற்கு வருவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை கொண்டிருக்கும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றார்.

பின்னர் லீக் மற்றும் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்திவந்த டி வில்லியர்ஸ் ஐபிஎல் போட்டிகளுக்காக பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணியுடன் இணைந்தார். மேலும் அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் பெங்களூரு அணிக்காக மேலாக விளையாடி வருகிறார்.

அடுத்து வரும் ஐபிஎல் ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவரை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பாக்கப் பட்ட நிலையில் இவர் திடீர் ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சூப்பர் 360 –யின் ஆட்டத்தை இனி ரசிகர்கள் இனி பார்க்கவே முடியாது என வருத்தத்தை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.