இயக்குனர் ஷங்கர் மீது மேலும் ஒரு தயாரிப்பாளர் வழக்கு!
- IndiaGlitz, [Tuesday,August 24 2021]
பிரபல இயக்குனர் ஷங்கர் மீது ஏற்கனவே லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமானதை அடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜா நடிக்கும் திரைப்படத்தை இயக்க முடிவு செய்தார். இதனை அடுத்து ‘இந்தியன் 2’படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக் கூடாது என லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இடைக்காலத் தீர்ப்பில் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை இல்லை என நீதிமன்றம் அறிவித்தாலும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்னும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது புதிய திருப்பமாக ஷங்கர் மீது ஆஸ்கார் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்துள்ளார். ’அந்நியன்’ படத்தின் காப்பிரைட் தன்னிடம் இருக்கும் போது அதனை தனக்கு தெரியாமல் ஹிந்தியில் ரீமேக் செய்யும் வேலைகளை ஷங்கர் செய்து வருவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏற்கனவே ஆஸ்கார் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஷங்கர் பதில் அளித்திருந்தார் என்பதும், அதில் அந்நியன்’படத்தின் கதை தன்னுடையது என்பதாலும், அந்த கதையின் காப்பிரைட் தன்னிடம் இருப்பதாலும் யாருடைய அனுமதியும் அந்நியன் படத்தின் ரீமேக்கிற்கு தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு நீதிமன்ற வழக்குகள் தடையாக இருந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.