ஆண் தேவதை: நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு பாடம்
கடந்த 2010ஆம் ஆண்டு இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனர் சிகரம் பாலசந்தர் நடித்த 'ரெட்டைச்சுழி' படத்தை இயக்கிய இயக்குனர் தாமிராவின் அடுத்த படைப்பான 'ஆண் தேவதை' திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்போம்.
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் தம்பதிக்கு மகள், மகன் என இரட்டைக்குழந்தைகள். இருவருமே வேலை வேலை என்று இருப்பதால் குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லை. இதனால் இருவரில் ஒருவர் வேலையை விட்டுவிட்டு குழந்தைகளையும் வீட்டையும் கவனிக்க வேண்டும் என்று முடிவெடுக்கின்றனர். தன்னால் வேலையை விடமுடியாது என ரம்யா கண்டிப்புடன் கூறியதால் வேறு வழியின்றி வேலையை விடும் சமுத்திரக்கனி, குழந்தைகளையும் வீட்டையும் கவனிக்கும் ஹவுஸ் ஹஸ்பண்ட் ஆகிறார். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் ஒரு சிறு பிரச்சனை பூதாகரமாகி வீட்டை விட்டு மகளுடன் வெளியேறுகிறார் சமுத்திரக்கனி. பணம், வேலை இரண்டுமே இல்லாத சமுத்திரக்கனி எப்படி சமாளிக்கின்றார், வீட்டையும் மகனையும் பார்க்க ஆளில்லாமல் இருக்கும் ரம்யாவின் நிலை என்ன? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அல்லது வேறு முடிவை எடுத்தார்களா? என்பதுதான் மீதிக்கதை
ஒரு திரைப்படத்தில் நல்லவர், அறிவுரை சொல்பவர், விட்டுக்கொடுப்பவர் கேரக்டர் என்றால் உடனே எந்த இயக்குனருக்கும் சமுத்திரக்கனி பெயர் தான் ஞாபகம் வரும். அந்த வ்கையில் சமுத்திரக்கனியும் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். பல காட்சிகளில் அவருடைய 'அப்பா' படம் ஞாபகம் வருகிறது.
ஐடி துறையில் பணிபுரியும் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துகிறார் ரம்யா பாண்டியன். தன்னுடைய கேரியரில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி, இந்த உழைப்பு தனது குழந்தைகளுக்காக என்ற எண்ணம், அதே நேரத்தில் மானத்தை விட்டுக்கொடுக்காமல் வாழ வேண்டும் என்ற குணம், கொஞ்சம் ஈகோ என ரம்யா ஒரு குடும்ப பெண் கலந்த மாடர்ன் பெண் கேரக்டரில் மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதேபோல் நல்ல கேரக்டரை தேர்வு செய்தால் இவருக்கு கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் உள்ளது.
குழந்தை நட்சத்திரங்களான கவின், மோனிகா இருவருக்குமே நல்ல நடிப்பு என்றாலும் மோனிகாவின் குழந்தைத்தனம் சிலசமயம் மிஸ் ஆகிறது. ஐடியில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினர் கையில் அதிக பணம் புழங்கினால் தடம் மாறும் கேரக்டரில் பிக்பாஸ் சுஜாவின் நடிப்பு அருமை. ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ராதாரவி, காளி வெங்கட் கேரக்டர்கள் மனதில் நிற்கின்றன. அறந்தாங்கி நிஷாவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
கதையோட்டத்திற்கு பொருத்தமான விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், இரண்டே கால் மணி நேரத்தில் படத்தை முடித்த எடிட்டர் காசி விஸ்வநாதனின் பணிகளும் சிறப்பானவை
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஐடியில் கிட்டத்தட்ட லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தால் உடனே கார் லோன், ஹோம் லோன் , சொந்த வீடு லோன் என வாங்கி அதன் பின்னர் திடீரென வேலை போய்விட்டாலோ அல்லது வேறு காரணத்தினாலோ பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுடைய வாழ்க்கை என்னாகும் என்ற நல்ல கருத்தை சொல்ல வந்த இயக்குனர் தாமிராவுக்கு பாராட்டுக்கள். ஆனால் அதே நேரத்தில் திரைக்கதை புதுமையான காட்சிகள் இல்லாமல் ஒரு நேர்கோட்டில் செல்கிறது. இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் நகரத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே அனுபவித்திருப்பார்கள், அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். அதையே திரையில் பார்க்கும்போது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது. கணவன், மனைவிக்குள் ஏற்படும் ஈகோ பிரச்சனைகளை இன்னும் ஆழமான காட்சிகளால் விளக்கியிருக்கலாம். இருப்பினும் ஐடி துறையில் அதிகம் சம்பாதித்தாலும் வெட்டி பந்தாவால் கடன் வாங்கி கலங்கும் நடுத்தர வர்க்கத்துக்கு ஒரு பாடம் சொல்லும் வகையில் இந்த படத்தை உருவாக்கிய இயக்குனரின் நல்ல முயற்சி வரவேற்கத்தக்கது. வேலைக்கு செல்லும் தம்பதிகள் பணம் மட்டுமே பிரதானமாக இல்லாமல் குடும்பத்திற்காக ஒருவர் வேலையை தியாகம் செய்ய வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் உருவாக்கப்பட்ட இந்த படத்தை ஒருமுறை அனைவரும் பார்க்கலாம்
Comments