இந்தியா பெற்றது பிச்சை… சர்ச்சை கருத்தை வெளியிட்ட நடிகை கங்கனா!
- IndiaGlitz, [Friday,November 12 2021]
இந்தியா கடந்த 1947 ஆம் ஆண்டு பெற்றது சுதந்திரம் அல்ல பிச்சை… 2014 ஆம் ஆண்டுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது என பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத் கருத்துத் தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா சமீபத்தில் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேபோல பாலிவுட்டிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிப்பிற்காக 4 தேசிய விருதை பெற்ற நடிகை கங்கனா சமீபத்தில் “பத்மஸ்ரீ“ விருதையும் பெற்றிருக்கிறார்.
இதையடுத்து ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்த நடிகை கங்கனா, “1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கொடுக்கப்பட்டது சுதந்திரம் அல்ல பிச்சை. 2014 ஆம் ஆண்டுதான் இந்தியாவிற்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது. காங்கிரஸ் ஆங்கிலேயர் ஆட்சியின் நீட்சி“ என்று பேசியிருந்தார்.
இவரது கருத்துக்கு பாஜகவின் முன்னணி தலைவரும் எம்.பியுமான வருண்காந்தி கடும் கண்டனங்களை வெளியிட்டு உள்ளார். மேலும் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகையின் கங்கனாவின் கருத்து சுதந்திர போராட்ட வீரர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் இது தேசத்துரோகம் இல்லையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரித்தி சர்மா மேனன் கங்கனா ரனாவத்துக்கு எதிராக மும்பை காவல் துறையில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர காங்கிரஸ் மட்டத்தில் இருந்து நடிகை கங்கனாவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதோடு “பத்ம விருதுகளை வழங்குவதற்கு முன்பு உரிய நபருக்கு மனநலம் பரிசோதனை செய்யவேண்டும். இதுபோன்ற நபர்கள் நாட்டையும், நாட்டின் ஹீரோக்களையும் அவமானப்படுத்துவதை தவிர்க்க முடியும் என்று கூறி நடிகை கங்கனாவின் பத்ம விருதை திரும்பபெற வேண்டும் என கூறிவருகின்றனர்.