அறிமுக இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தத்தின் ‘ஆக்கம்’ வட சென்னையின் குப்பை மேடுகளுக்கும், கூவத்துக்கும் அருகில் வசிக்கும் மனிதர்களைப் பற்றிய கதை. தமிழ் சினிமாவில் வட சென்னை வாழ்வியலை பதிவு செய்யும் படங்கள் அதிகரித்துவருவது வரவேற்கத்தக்க அம்சம்தான் என்றாலும் இதில் பெரும்பாலான படங்கள் வட சென்னையை ரவுடிகள் மற்றும் தாதாக்களின் பிறப்பிடமாகக் கான்பிக்கின்றன. ’ஆக்கம்’ படம் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் மீறி அங்கு ஏழ்மை நிலையில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை நிஜத்துக்கு நெருக்கமாகப் பதிவு செய்திருப்பதுதான் இந்தப் படத்தின் ஆகப் பெரிய சிறப்பு என்று சொல்லலாம்.
படத்தின் நாயகன் சொக்குவும் அவனது நண்பர்களும் திருடியும் மற்றவர்களை ஏமாற்றியும் பணம் சம்பாதித்து குடித்துவிட்டுத் திரிகிறார்கள். சொக்குவின் அம்மா, சாராயம் மற்றும் கஞ்சா விற்கிறார். கொலை, கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டு அந்த ஏரியாவில் பெரிய தாதாவாக உருவாவதுதான் சொக்குவின்ன் லட்சியும். அதைத்தான் அவனது அம்மாவும் விரும்புகிறார். சொக்குவை உயிருக்கு உயிராகக் காதலிக்கிறாள் ஜெயா . ஆனால் சொக்கு பெண்களை வெறும் போகப் பொருளாகப் பார்க்கிறான். ஜெயாவின் காதலைப் பயன்படுத்தி அவளிடமிருந்து பணம் பெறுவதோடு அவளை கர்ப்பம் ஆக்கிவிடுகிறான். கருவை கலைக்கச் சொல்கிறான். ஆனால் ஜெயா அந்தக் குழந்தையைப் பெற்று நல்லபடியாக வளர்க்க முடிவுசெய்கிறாள்.
சொக்கு ஒரு கொலை வழக்கில் போலீஸால் கைது செய்யப்படுகிறான். அவனைக் காப்பாற்றும் சேட்டு அவனை பல தவறான தொழில்களில் ஈடுபடுத்துகிறான். அதன் மூலம் சொக்கு தான் ஆசைப்பட்டபடி ஏரியாவில் பெரிய தாதாவாகிறான். போலீஸ் அவனை என்கவுண்டரில் கொன்றுடிவிடத் திட்டமிடுகிறது.
அதே பகுதியில் முன்பு ரவுடியாக இருந்து இப்போது திருந்தி அனைவரது மதிப்பையும் பெற்றவனான ரங்கா சொக்குவைத் திருத்த முயல்கிறான். ஆனால் சொக்கு ரங்காவைப் பார்ப்பதைக்கூட தவிர்க்கிறான். இறுதியில் சொக்குவுக்கு என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.
படத்தின் தொடக்கக்காட்சியிலேயே நாயகனும் அவனது நண்பர்களும் கூவத்தில் நீந்தி ஒரு இடத்துக்கு சாவு நடனம் ஆட வந்து சேர்கிறார்கள். டேங்கர் லாரியில் குளித்துவிட்டு சாவு நடனம் ஆடுகிறார்கள். இந்த முதல் காட்சியிலேயே கதைச் சூழலையும் கதாபாத்திரத்தையும் அழுத்தமாகப் பதியவைத்துவிடுகிறார் இயக்குனர்.
தொடர்ந்து அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரு கலவரம் நடந்தால் அந்தச் சூழலைப் பயன்படுத்தி ஆண்-பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் கடைகளிலிருந்து பொருட்களை திருடிச் செல்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை வெளியுலகினருக்கு அதிர்ச்சி அளிப்பவையாக அவர்களால் கீழானதாகப் பார்க்கப்படுபவையாக இருக்கலாம். ஆனால் இதுவும் ஒரு சமூக யதார்த்தம்தான். இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் அவர்களுக்கும் அன்பு, காதல், காமம், சோகம், துரோகம், ஏக்கம், கனவு, விரக்தி எல்லாம் இருக்கிறது என்பதைப் படம் உணர வைக்கிறது.
சமுதாயத்தின் மேல்தட்டில் இருக்கும் பலரால் கீழ்மை நிறைந்தவர்களாகப் பார்க்கப்படும் இந்த மனிதர்கள்தான் நண்பர்களை உயிருக்கு சமமாக பாவிப்பவர்கள், நம்பி வந்தவரை உயிர்போனாலும் கைவிடாதவர்கள், வீடிழந்து நிற்பவருடன் தான் வசிக்கும் இடத்தை பகிர்ந்துகொள்ளத் தயங்காதவர்கள், திருநங்கையாக மாறிவிட்ட ஆண் நண்பனை ஒதுக்கிவிடாமல் அதே நட்புடன் நடத்துபவர்கள், கர்ப்பம் தரித்த மகளை கருக்கலைக்கச் சொல்லாமல் அவளது காதலை மதிக்கும் அப்பாக்களாக இருக்கிறார்கள் என்பதையும் இயல்பாகப் பதிவுசெய்கிறது இந்தப் படம்.
இது ஒரு ரவுடியின் கதை. அவன் கொலை, கொள்ளையில் விரும்பி ஈடுபடுகிறான். பெண்களை ஏமாற்றுகிறான். ஆனால் அம்மா மீதும் நண்பர்களிடமும் கலங்கமற்ற அன்பு வைத்திருக்கிறான். இப்படிப்பட்ட ஒருவனுக்கு ஒரு சோகமான முன்கதையைச் சொல்லி அவனது செயல்களை நியாயப்படுத்தி பார்வையாளர்களின் கருணையைப் பெறும் முயற்சி கதையில் எங்குமே இல்லை கடைசி காட்சியில் மட்டும் நாயகனின் முன்கதை காட்டப்படுகிறது. அதுவும் நல்ல தாக்கம் செலுத்துவதாக கல்வியின் அவசியத்தை உணர்த்துவதாக இருக்கிறது.
யதார்த்தமான வாழ்வியல் பதிவு மற்றும் பாத்திரப்படைப்புகளால் ஒரு கவனிக்கத்ததக்க படமாக ஆகிறது ‘ஆக்கம்’. மற்றபடி கதையில் புதியதாக ஒன்றும் இல்லை. திரைக்கதை மிக நீளமாகவும் மெதுவாகவும் நகர்கிறது. காட்சிகள் தேவைக்கதிகமாக நீள்கின்றன. பல காட்சிகள் எதற்காக வைக்கப்பட்டன என்றே புரியவில்லை. பல காட்சிகள் என்ன சொல்ல வருகின்றன என்று புரிந்துகொள்வதற்குள்ளாக வெட்டப்பட்டுவிடுகின்றன. பல இடங்களில் நடிகர்களின் உதட்டசைவும் டப்பிங் குரலும் பொருந்தவேயில்லை. கதை, திரைக்கதை, இயக்கத்தில் இத்தனை குறைகளை மீறி மேலே விளக்கப்பட்டுள்ள நிறைகள் எந்த அளவுக்கு ரசிகர்களை திருபதிபடுத்தும் என்பது சந்தேகமே.
சொக்குவாக சதிஷ் ராவண் பாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். பாத்திரத்துக்கேற்ற உடல்மொழி. எக்ஸ்பிரஷன், நடனம், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் சிறப்பாக தந்துள்ளார். ஜெயாவாக டெல்னா டேவிஸ் அழகாக இருப்பதோடு நடிப்பிலும் குறைவைக்கவில்லை. துணைப் பாத்திரங்களில் வரும் நடிகர்களும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தாமல் கடந்துசெல்கின்றன. பின்னணி இசை பொருத்தமாகவும் சில இடங்களில் கவனித்து ரசிக்கும்படியும் உள்ளது. ஜி.ஏ.சிவசுந்தரின் ஒளிப்பதிவு கதைக்களத்தையும் அந்த மனிதர்களையும் அசலாகக் கண்முன் நிறுத்துகிறது. எல்.வி.கே. தாஸின் படத்தொகுப்பில் பல காட்சிகள் அந்தரத்தில் தொங்கவிடப்பட்டதுபோன்ற உணர்வைத்தருகின்றன.
மொத்தத்தில் ‘ஆக்கம்’ ஒரு வாழ்வியல் பதிவாக கவனம் பெறுகிறது. திரைக்கதை சரியில்லாததால் முழுத் திருப்திதரத் தவறுகிறது. இருந்தாலும் இப்படி ஒரு கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் திரையில் உலவவிட்ட துணிச்சலுக்காகவும் உழைப்புக்காகவும் அறிமுக இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் பாராட்டுக்குரியவராகிறார்.
Comments