பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் அவசியம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Saturday,January 13 2018]
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும், அந்த ஆதார் அட்டை எண்ணை பல்வேறு ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆதார் அட்டையில் உள்ள தகவல்களின் பாதுகாப்பு குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஆதார் அட்டை அவசியம் என்றே வலியுறுத்தப்பட்டு வருகிறது
இந்த நிலையில் சென்னையில் சாலையோரம் பெட்டிக்கடை வைப்பதற்கும் ஆதார் அவசியம் என சென்னை ஐகோர்ட் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. சாலையோரம் பெட்டிக்கடை வைக்க அனுமதி வழங்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மாநகராட்சி தரப்பில் பெட்டிக்கடைக்கான உரிமம் பெறுபவர்கள் வேறு நபர்களுக்கு விற்றுவிடுவதாக வாதாடப்பட்டது.
இந்த நிலையில் ஒரே நபர் அதிக பெட்டிக்கடைகளுக்கான அனுமதி பெறுவதை தடுக்கும் வகையில் பெட்டிக்கடை வைக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறு விண்ணப்பம் செய்யும் போது, ஒரு மாதத்தில் பரிசீலனை செய்து மாநகராட்சி முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே பெட்டிக்கடை வைக்க அனுமதிக்க கூடாது என்றும் பெட்டிக்கடையில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்கவும் அனுமதி இல்லை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.