ஆதார் இருந்தால்தான் திருமணம்! மத்திய அரசின் அடுத்த அதிரடி
- IndiaGlitz, [Wednesday,July 05 2017]
கடந்த சில மாதங்களாகவே இந்திய குடிமகனின் அடையாள அட்டையான ஆதார் அட்டை எண்ணை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட பல ஆவணங்களில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இனிமேல் திருமணம் செய்ய பெண் மட்டும் இருந்தால் போதாது, ஆதார் அட்டையும் வேண்டும் என்ற நிலை ஏற்படவுள்ளது. மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் சமீபத்தில் பரிந்துரை ஒன்றை செய்துள்ளது. இதன்படி எந்த மதத்தின் திருமணமாக இருந்தாலும், அந்த திருமணம் 30 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவ்வாறு பதிவு செய்வதற்கு மணமக்களின் ஆதார் எண் கட்டாயம் என்றும் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யாத தம்பதிகளிடம் அபராதம் வசூல் செய்வதோடு அவர்களுக்கு திருமண சலுகைகள் எதுவும் கிடைக்காது என்றும் அறிவிக்கப்படவுள்ளதாம்.
மேலும் இவ்வாறு திருமண பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதன் மூலம் திருமணம் செய்து ஏமாற்றுபவர்களை எளிதில் தடுக்க முடியும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி கைவிடப்பட்ட பெண்களுக்கு கணவனிடமிருந்து உதவியை பெற்றுத் தரவும் இது உதவியாக இருக்கும் என்று சட்ட ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.