ரூ.500க்கு கூவிக்கூவி விற்கப்படும் ஆதார் தகவல்கள்: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Thursday,January 04 2018]
ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு, சுப்ரீம் கோர்ட்டில் பதிலளித்த மத்திய அரசு, ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதியளித்திருந்தது. ஆனால் சற்றுமுன் கிடைத்த செய்தியின்படி ரூ.500 கொடுத்தால் ஆதார் இணையதளத்தின் அட்மின் தகவல்களே விற்கப்படுவதாகவும், இந்த அட்மின் இணைப்பின் மூலம் இந்தியாவில் உள்ள யாருடைய ஆதார் தகவல்களை எளிதில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது
இதுகுறித்து வட இந்திய பத்திரிகை ஒன்றின் செய்தியில் கூறியிருப்பதாவது: 500 ரூபாய் கொடுத்தால் ஆதார் தகவல்கள் கிடைக்கும் என வாட்ஸ் அப் ஒன்றில் குறுந்தகவல் வந்ததாகவும், அந்த நபரின் கணக்கில் ரூ.500 செலுத்தப்பட்டதும் ஆதார் இணையதளத்தின் அட்மின் பாஸ்வேர்ட் அனுப்பப்பட்டதாகவும், இதனைக்கண்டு அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றதாகவும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.
500 ரூபாய் கொடுத்தால் இந்தியாவில் உள்ள 119,22,59,062 நபர்களின் ஆதார் தகவல்களை பார்க்கும் வகையில் பாதுகாப்பின்றி ஆதார் தகவல்கள் உள்ளதாகவும், கூடுதலாக ரூ.300 கொடுத்தால் அதே நபர் சாப்ட்வேர் ஒன்றை அனுப்பி வைப்பதாகவும், அதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் ஆதார் தகவல்களை கச்சிதமாக பிரின்ட் செய்துகொள்ள முடியும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் இந்த தகவல் பொய்யானது என்று தேசிய தனிநபர் அடையாள ஆணையம் விளக்கமளித்துள்ளதோடு, ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளது.