A1 Review
'A1' : காமெடியிலும் A1
சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்த நிலையில் அவர் நடித்துள்ள அடுத்த ஹீரோ காமெடி திரைப்படமான 'A1'படத்தின் விமர்சனம் குறித்து தற்போது பார்ப்போம்
நாயகி தாரா அலிஷாவுக்கு ஒரு வீரமான அய்யர் பையனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை. இதனை அடுத்து அவர் வைக்கும் டெஸ்டில் தற்செயலாக வந்து விழுகிறார் சந்தானம். அவரை ஒரு அய்யர் பையன் என நினைத்து காதலை புரபோஸ் செய்து, முத்தம் எல்லாம் கொடுத்த பிறகு, சில நாட்கள் கழித்து தான் அவர் அய்யர் பையன் இல்லை என்றும், ஒரு பக்கா லோக்கல் பையன் என்றும் தெரிய வருகிறது. இதனை அடுத்து சந்தானத்தின் காதலை முறித்து கொள்கிறார் நாயகி. அதன் பின்னர் ஒரு கட்டத்தில் நாயகியின் தந்தைக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வர, அவரை சந்தானம் காப்பாற்ற, அந்த நன்றிக்கடனால் சந்தானம் மீது மீண்டும் காதல் கொள்கிறார் நாயகி.
ஆனால் சந்தானத்தை நாயகியின் தந்தைக்கு பிடிக்கவில்லை. தனது தந்தையை மீறி தன்னால் காதலிக்க முடியாது என்றும், ஏனெனில் தனது தந்தை அவ்வளவு நல்லவர் என்றும் கூறும் நாயகி, தனது தந்தை கெட்டவர் என்று சந்தானம் நிரூபித்து விட்டால் உடனே காதலுக்காக பெற்றோரை விட்டு வர தயார் என்று நாயகி கூறுகிறார். இதனை தனது நண்பர்களிடம் போதையில் கூறும் சந்தானம், நாயகியின் தந்தையை கொலை செய்தால்தான் தனது திருமணம் நடக்கும் என்று உளறுகிறார். இதனை உண்மை என நம்பிய சந்தானத்தின் நண்பர்கள் 3 பேர், நாயகியின் தந்தையை கொலை செய்துவிடுகின்றனர். இதன் பின்னர் நாயகியின் தந்தை நடு வீட்டில் பிணமாக வைக்கப்பட்டிருக்க அவரைச் சுற்றி நடக்கும் காமெடி, த்ரில் சம்பவங்கள், சில சஸ்பென்ஸ்கள் போலீஸ் வருகை, போன் மிரட்டல் மற்றும் சிலபல குழப்பங்களுக்கு பிறகு இறுதியில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை
சந்தானம் முழு ஹீரோவாக மாறினாலும் தனக்கேற்ற காமெடி அம்சமுள்ள கதையை தேர்வு செய்து மிகப் பொருத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது எனர்ஜி கொஞ்சம் கூட குறையவில்லை ஆங்காங்கே ஒன்லைன் காமெடியால் சிரிக்க வைக்கும் சந்தானம், ரொமான்ஸ் மற்றும் சீரியஸ் காட்சிகளிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக நாயகியின் தந்தை பிணமாக இருக்கும் அந்த அரைமணி நேரமும், ஒரு குடிகார அய்யர் செய்யும் சேட்டையும் அதற்கு சந்தானம் தரும் பதிலடியும் விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உள்ளது.
நாயகி தாரா அலிஷா, அய்யர் பெண் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். காமெடி மட்டும் ரொமான்ஸ் நடிப்பில் தேறி விடுவதால் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நடிக்க தெரிந்த நாயகி கிடைத்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
படத்தின் மிக பிளஸ் சந்தானம் கூடவே வரும் மூன்று நண்பர்கள். அவர்கள் பேசும் டைமிங் காமெடிகள் தொடர்ந்து பார்வையாளர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக பழைய ஜோக் தங்கதுரை காமெடியில் பெரிய ஆளாக வருவார் என தெரிகிறது. எம்எஸ் பாஸ்கரும் தன் பங்குக்கு காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளார். சாய்குமார் சீரியஸ் போலீசாக அறிமுகமாகி கடைசியில் சிரிப்பு போலீஸாக மாறி விடுகிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம். குறிப்பாக 'மாலை நேர'ம் என்ற பாடல் தியேட்டரை விட்டு வெளியே வந்த பின்னரும் காதில் முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையும் கதைகேற்ற அளவில் உள்ளது. இயக்குனர் ஜான்சன் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடி திரைக்கதையை கொஞ்சம் கூட துவளாமல் கொண்டு சென்றுள்ளார். படத்தின் கதையில் பெரிய பெரிய லாஜிக் இருந்தாலும் கேப் விடாமல் தொடர்ந்து சிரிக்க வைத்து கொண்டிருப்பதால் அந்த லாஜிக் கூட மறந்துவிடுகிறது. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகள் பக்கா. மொத்தத்தில் இரண்டு மணி நேரம் மனம் விட்டு சிரிக்கும் வகையில் உள்ள படம் உண்மையில் டைட்டிலுக்கேற்ப 'A1' காமெடி படம்தான்
- Read in English