எங்க ஊரையே காணும் சார்..! ராமநாதபுரத்தில் காணாமல் போன ஒரு கிராமம்.
- IndiaGlitz, [Saturday,December 14 2019]
சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஒரு கிராமத்தையே வாக்காளர் பட்டியலில் காணவில்லை என அக்கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கமுதி ஒன்றியத்துக்குட்பட்ட நாராயணபுரம் ஊராட்சியில் கோட்டைமேடு, நரசிங்கப்பட்டி, செங்கொடிநகர், கல்லுப்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன. அண்மையில் வார்டு வரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இங்குள்ள 6 கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள், ஒரே வார்டில் இல்லாமல் வெவ்வேறு வார்டுகளில், வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஒரே குடும்பத்தில் உள்ள வயதான வாக்காளர்கள், பெண்கள் 3 கி.மீ. தொலைவில் உள்ள வெவ்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்களது கிராமத்தின் பெயரையே காணவில்லை என நரசிங்கம்பட்டி கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மாறாக கோட்டைமேடு, நாராயணபுரம், முத்தாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் தெருக்களின் பெயர்களில் வாக்காளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
சிட்டிசன் திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தைப் போல கடந்த தேர்தல் வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த தங்களது கிராமத்தின் பெயர், மறுசீரமைப்பு செய்யப்பட்ட பட்டியலில் இல்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனைக் கண்டித்து போஸ்டர்களை ஒட்டியுள்ள கிராம மக்கள், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாகவும் கூறினர்.
கிராம மக்களின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து கமுதி வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் அதிகாரியுமான ரவியிடம் கேட்டபோது, அதிக எண்ணிக்கையிலான புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் ஏற்பட்ட பிரச்சனை என்றும் தேர்தல் முடிந்தபின், அதனை சரிசெய்துவிடுவோம் என்றும் கூறினார்.