காதலர் தினம்: பெண்கள் கல்லூரியின் அலர்ட் மெசேஜ்
- IndiaGlitz, [Friday,February 14 2020]
இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் காதலர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் கல்லூரி நேரம் முடிந்தவுடன் பல மாணவர்கள் மற்றும் மாணவிகள் தங்களுடைய காதலர்களுடன் பூங்காக்கள், கடற்கரை, தீம் பார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சென்னை உள்பட பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் காதலர்கள் அணிவகுத்து செல்லும் காட்சியை காண முடிகிறது. வேலைக்கு செல்லும் இளைஞர்களும் பெண்களும் கூட இன்று விடுமுறை எடுத்துவிட்டு காதல் பறவைகளாக சுற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூரில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது. அந்த குறுஞ்செய்தியில் ’இன்று கல்லூரி மதியம் 1 மணியுடன் முடிந்து விடும் என்றாலும் அதற்கு முன்னரே 12.55 மணிக்கே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அழைத்து செல்ல விரும்பினால் அழைத்துச் செல்லலாம் என்றும் மாணவிகளின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் நேரில் வந்தால் அவர்களுடன் அனுப்பி வைக்க கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குறுஞ்செய்தி பெற்றோர்களை ஆச்சரியப்பட வைத்தாலும், காதலர் தினத்தை கொண்டாட காத்திருந்த மாணவிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒரு தனியார் கல்லூரி ‘எங்கள் கல்லூரியில் இன்று எந்தவிதமான ஸ்பெஷல் வகுப்புகளும் இல்லை என்றும் வழக்கமான நேரத்தில் கல்லூரி முடிந்துவிடும் என்றும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.