"இந்தியக் குடியுரிமைலாம் எங்களுக்கு வேணாம்..! உண்மையான இந்து இந்த சட்டத்தை ஏற்க மாட்டான்". பாகிஸ்தான் இந்து கவுன்சில் அறிவிப்பு.
- IndiaGlitz, [Thursday,December 19 2019]
திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு, எதிராக மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. புதிய சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில், போலீஸார் தடியடி நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியுரிமைச் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், புதிய குடியுரிமைச் சட்டத்தின்படி, யார் யாருக்கெல்லாம் இந்திய குடியுரிமை வழங்கப்படவுள்ளது என்கிற புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி 31,313 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதில், 25,441 பேர் வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள். அடுத்தபடியாக 5,807 சீக்கியர்களுக்கு அதிகபட்சமாகக் குடியுரிமை வழங்கப்படவுள்ளது. 55 கிறிஸ்துவர்கள் 2 புத்தமதத்தவர் 2 பார்ஸிகளுக்கும் இந்திய குடியுரிமை அளிக்கப்படவுள்ளன.
குடியுரிமை பெறும் இவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த நாட்டில் மதத்தின் பெயரால் துன்புறுத்தப்பட்டவர்கள். தாங்கள் துன்புறுத்தப்பட்டதை ஆவணங்கள் வழியாக நிரூபித்தவர்கள் என்று ஐ.பி உளவுப்பிரிவு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு வந்த சமயத்தில் தாங்கள் மத ரீதியாகத் துன்புறுத்தலுக்குள்ளானவர்கள் என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். அதோடு, இந்திய குடியுரிமைக்கும் விண்ணப்பித்தவர்கள். இந்தியாவுக்குள் நுழையும் சமயத்தில் மதரீதியாகத் துன்புறுத்தப்பட்டதை நிரூபிக்க முடியாதவர்கள் குடியுரிமை பெறுவது கடினம் என்றும் ஐ.பி சொல்கிறது.
அதேவேளையில், பாகிஸ்தான் இந்து கவுன்சில் அமைப்பு இந்தியாவின் புதிய குடியுரிமைத் திருத்த மசோதாவை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் ராஜா அசார் மங்லானி, 'எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ''இந்தியாவின் புதிய குடியுரிமைத் திருத்த மசோதா இந்திய மக்களிடையே மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தும். உண்மையான இந்து இது போன்ற சட்டத்தைக் கண்டிப்பாக ஆதரிக்க மாட்டான். இந்திய பிரதமர் மோடிக்கு பாகிஸ்தானின் ஒட்டு மொத்த இந்துக்களும் தெரிவிக்கும் செய்தி இதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீறிய செயல் இது. இந்தியா அளிக்கும் குடியுரிமை எங்களுக்குத் தேவையில்லை'' என்கிறார்.
பாகிஸ்தான் வாழ் சீக்கியர்களின் பாபா குருநானக் அமைப்பும் இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் கோபால்சிங், ''இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நாங்கள் சிறுபான்மையினர்தான். மோடி அரசு இயற்றியுள்ள புதிய சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது. சிறுபான்மையினரை மோடி அரசு கிணற்றுக்குள் தள்ளிவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் படிப்படியாகச் சிறுபான்மையினர் அதிகரித்து வருவதாகவே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 1972-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சிறுபான்மையினர் மக்கள் தொகை 3.25 சதவிகிமாக உயர்ந்தது. அதாவது, 0.42 சதவிகிதம் அதிகரித்திருந்தது. 1981-ம் ஆண்டு 3.30 சதவிகிதமாகவும் 1998-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 3.70 சதவிகிதமாகவும் சிறுபான்மையின மக்கள் தொகை பாகிஸ்தானில் உயர்ந்துள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு பாகிஸ்தானில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் வாழும் இந்து மக்கள் தொகை 4 சதவிகிதமாக உயர்ந்திருக்கும் என்று இந்து கவுன்சில் அமைப்பின் தலைவர் மங்கலானி கூறியுள்ளார். பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 21 கோடி ஆகும். பாகிஸ்தானில் வாழும் இந்துக்களில் 80 சதவிகிதம் பேர் சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள். இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இந்த மாகாணத்தின் தலைநகர்தான் பாகிஸ்தானின் பொருளாதார தலைநகரான கராச்சி.