மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Friday,April 03 2020]
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வெளியூர்களில் சிக்கியிருக்கும் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே சென்று வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் இருந்தும், மகாராஷ்டிராவில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சுமார் 400 முதல் 600 கிலோ மீட்டர் வரை நடந்து செல்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வந்தது. இதில் ஒரு சிலர் நடந்து செல்லும் வழியில் உயிரிழந்தும் உள்ளனர் என்பது சோகமான தகவல்கள் ஆகும்
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் மகாராஷ்டிராவில் படித்து வந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்திற்கு நடந்து செல்ல முடிவு செய்தனர். சுமார் 30 மாணவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது தெலுங்கானா மாநிலம் வரை அவர்கள் வந்தபோது திடீரென மாணவர் ஒருவருக்கு உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது
இதனை அடுத்து தெலுங்கனா போலீசார் அந்த மாணவரை முகாமில் வைத்து மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இருப்பினும் அந்த மாணவர் சிகிச்சையின் பலன் இல்லாமல் உயிரிழந்து உள்ளார். இந்த நிலையில் அந்த மாணவரின் உடலை தமிழகம் கொண்டு செல்ல தெலுங்கானா போலீசார் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது
மகாராஷ்டிராவில் இருந்து நடந்தே வந்த மாணவரின் பெயர் லோகேஷ் பாலசுப்பிரமணியம் என்றும், அவர் தமிழகத்தின் பள்ளிபாளையம் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து தமிழகத்திற்கு நடந்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது