இறந்து 50 வருஷம் ஆகியும் இந்திய எல்லையைப் பாதுகாக்கும் சோல்ஷர்… கதிகலங்க வைக்கும் மர்மக் கதை!!!
- IndiaGlitz, [Tuesday,October 27 2020]
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சிக்கிம் எல்லைப் பகுதியில் இரவு நேரத்தில் மட்டும் ஒரு இராணுவ வீரர் வெள்ளைக் குதிரையில் ஏறி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார் என சீனா, இந்திய வெளியுறவுத் துறையிடம் முறையிட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த இந்தியா, சிக்கிம் பகுதி குறித்த உடன்பாட்டுக்குப் பிறகு எங்களுடைய வீரர்கள் யாரும் அந்தப் பகுதியில் ரோந்து பணி செய்வதில்லை எனக் கூறியிருக்கிறது. இந்நிலையில் சிக்கிம் பகுதியில் வெள்ளைக் குதிரையில் ஏறி யார் ரோந்து பணியில் ஈடுபட்டது என்பது புரியாத மர்மமாகவே இந்தியா இராணுவத்திற்கு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் இருநாட்டு பாதுகாப்பு படையை மீறி எல்லைப் பகுதிக்கு செல்வது என்பதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு காரியம்.
இதைத்தவிர பல ஆண்டு காலமாக இந்திய இராணுவம், சரியாக செப்டம்பர் 14 ஆம் தேதி பாபா ஹர்பஜன் சிங் எனும் பெயரில் ஒரு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கிறது. இந்த டிக்கெட்டில் ஒரு இராணுவ டிரெங்க் பெட்டி மட்டும் பயணம் செய்கிறது. அந்த பெட்டிக்கு காவலாக இரு இராணுவ வீரர்கள் உடன் வருகின்றனர். சிக்கிமிலிருந்து பஞ்சாப்பின் கபுர்தலாவிற்கு கொண்டு செல்லப்படும் அந்தப் பெட்டி 2 மாதம் கழித்து மீண்டும் சிக்கிம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத் தளத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இதைவிட இன்னொரு ஆச்சர்யம் இந்திய இராணுவம் 28 வயதில் உயிரிழந்த ஒரு இராணுவ வீரருக்கு அவர் இறந்தப் பின்பும் கிட்டத்தட்ட 40 வருட காலமாக அவருக்கு சம்பளம், பதவி உயர்வு, இராணுவ மரியாதை, விடுறை, எல்லைப் பகுதியில் அதிக பத்தட்டம் உள்ள நேரங்களில் பணி விடுப்பு இல்லை எனக் கூறுவது எனத் தொடர்ந்து புரியாத பல நடைமுறைகளை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இதையெல்லாம் பார்ப்பதற்கு எதோ மர்மக் கதையைச் சொல்வது போல தோன்றலாம். ஆனால் இத்தனை செயல்களையும் நமது பாரம்பரிய மிக்க இந்திய இராணுவம் கடைபிடித்து இருக்கிறது.
இத்தனை புரியாத மர்மப் புதிர்களுக்கு அடிப்படைக் காரணம் இந்திய இராணுவத்தில் ஹர்பஜன் சிங் என்பவர் தனது 18 வயதில் இணைந்து பணியாற்றத் தொடங்கி, கடந்த 1968 அக்டோபர் 4 ஆம் தேதி சிக்கிமின் நாதுலா பகுதியில் பணியாற்றிய போது ஒரு பனிப்பொழிவில் சிக்கி உயிரிழந்து விடுகிறார். 14,500 அடி உயரம் கொண்ட மலைப் பகுதியில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு உணவு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருந்த இவர் பனிப்பொழிவில் மாட்டி இறந்து போகிறார். ஆனால் பனிப்பொழிவில் மாட்டி இவர் உயிரிழந்த விஷயம் உடன் இருந்த இராணுவ வீரர்களுக்கே தெரியாமல் போகிறது.
அடுத்து ஹர்பஜன் காணாமல் போயிருப்பதை அறிந்து அவரைத் தேடிய வீரர்கள் உடல் எதுவும் கிடைக்காமல் ஒருவேளை சிக்கிம் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருவதால் பயந்து கொண்டு ஓடிவிட்டார் என முடிவுசெய்து அவரது வீட்டிற்கு தகவல் அனுப்பி விடுகின்றனர். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இயல்பாகவே ஹர்பஜன் சிங் யாரிடமும் அதிகமாகப் பேசும் பழக்கம் கொண்டவர் இல்லை. அவருக்கு ஒரு நெருங்கிய நண்பர் மட்டும்தான் அந்த பெட்டாலியனில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில் இராணுவத்தில் இருந்து பயந்து ஓடிவிட்டதாக ஹர்பஜன் சிங்கின் பைல் மூடப்படுகிறது. ஆனால் அதற்கு பின்னர் நடக்கும் மர்மமான சம்பவங்கள் இந்திய இராணுவத்தையே புரட்டிப் போடும் அளவிற்கு அதிபயங்கரமான வரலாற்றுக் கதையாகவே உருவெடுத்து விடுகிறது.
பஞ்சாப்பின் கபுர்தலாவில் கடந்த ஆகஸ்ட் 30 1946 ஆண்டு பிறந்தவர் ஹர்பஜன் சிங். அவருடைய 18 வயதில் இந்திய இராணுவத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கி விடுகிறார். அதைத் தொடர்ந்து கடந்த 1968 இல் இறந்தும் போகிறார். உயிரிழந்த விஷயம் தெரியாமல் பயந்து ஓடிவிட்டார் என இராணுவ அதிகாரிகள் முடிவு கட்டுகின்றனர். ஆனால் அவர் உயிரிழந்த 3 ஆவது நாள் அவருடைய நண்பரின் கனவில் தோன்றி நான் பயந்து ஓடவில்லை. பனிப்பொழிவில் மாட்டி இறந்துவிட்டேன் எனக் கூறுகிறார்.
இந்த கனவை அவருடைய நண்பர் அங்குள்ள உயர் அதிகாரியிடம் சொல்ல, முதலில் இதெல்லாம் உன்னுடைய மன அழுத்தம் காரணமாக வருவது எனக் கூறித் தட்டி கழிக்கிறார். ஆனால் தொடர்ந்து 4, 5, 6 ஆவது நாள் என ஒரே கனவு, ஒரே மாதிரியாக அவருடைய நண்பருக்கு வருகிறது. இதை மீண்டும் உயர் அதிகாரிக்கு சொல்ல, அவரும் சரியென்று அவர் குறிப்பிட்ட அந்த இடத்தில் மட்டும் தேடுகின்றனர். பார்த்தால் ஹர்பஜன் சிங்கின் உடல் கிடைக்கிறது.
உடனே இறந்த ஹர்பஜனுக்கு உரிய மரியாதையும் அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் தயார் செய்யப்படுகிறது. இப்படி நடந்து கொண்டிருக்கும் போது சிக்கிம் பகுதியில் போர் பதற்றம் முடிவுக்கு வருகிறது. இராணுவம் அப்பகுதியில் விலக்கிக் கொள்ளப்படுகிறது. ஆனால் சீனாவின் வெளியுறவுத் துறை சிக்கிம் பகுதியில் உள்ள இராணுவத் தளத்திற்கு ஒரு எச்சரிக்கையை விடுக்கிறது.
அது என்னவென்றால் இரவில் யாரோ ஒரு வீரர் வெள்ளைக் குதிரையில் ஏறி தனியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார். இப்படி தொடர்ந்து நடந்தால் போர் பதற்றம் மீண்டும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய இராணுவம் மறுப்பு தெரிவிக்கிறது. அதோடு நாதுலாவில் உள்ள இராணுவத் தளத்தில் மர்மமான சில செயல்களும் நடக்கின்றன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட சில வீரர்களுக்கு திடீர் திடீர் என்று அறை விழுகிறது.
இதென்ன புரியாத புதிராக இருக்கிறதே என இராணுவ வீரர்கள் பயந்து கொண்டிருக்கும் போது, அந்த இராணுவத் தளத்தில் உள்ள வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என அனைவருக்கும் ஒரே சமயத்தில், ஒரு கனவு வருகிறது. அந்த கனவில் ஹர்பஜன் சிங் தோன்றி நான்தான் வீரர்களை அடித்தேன். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது தூங்கிக் கொண்டிருந்தார்கள். அதோடு ஷீவில் அழுக்குப் படிந்து இருந்தது எனக் கூறியிருக்கிறார். மேலும் நான்தான் இரவு நேரங்களில் சீன எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகிறேன்.
இந்தக் கனவை நம்ப வேண்டுமா? வேண்டாமா என நினைத்துக் கொண்டிருந்த வீரர்களுக்கு மேலும் அடுத்து ஒரு பதட்டம். சிக்கிமின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சீனா இராணுவம் இந்தியா மீது போர்த் தொடுக்க போகிறது என மீண்டும் ஒரு எச்சரிக்கை கனவு. இந்த முறை பதட்டதோடு அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இந்திய இராணுவம் பாதுகாப்பில் ஈடுபடுகிறது. கனவில் வந்த மாதிரியே சீன இராணுவம் இந்தியா மீது போர்த் தொடுக்க அங்குள்ள அனைவருக்கும் தூக்கிவாரிப் போடுகிறது.
அதற்கு பின்பு ஹர்பஜன் சிங் பற்றிய மர்மக் கதை இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் என இரண்டு இடங்களிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. அன்று முதல் ஹர்பஜன் சிங் இந்திய இராணுவத்தில் பணியாற்றும் ஒரு வீரராகவே கணக்கில் கொள்ளப் படுகிறார். மேலும் சீனாவும் நாதுலா பகுதியில் ஹர்பஜன் குறித்து எச்சரிக்கையாக செயல்படுகிறது. மேலும் ஹர்பஜன் மீது கொண்டுள்ள பயத்தையும் சீனா பலமுறை வெளிப்படுத்துகிறது.
இப்படி ஆரம்பித்ததுதான் உயிரிழந்த வீரருக்கு சம்பளம், ரயில் டிக்கெட், 2 மாத விடுமுறைக்காக கபுர்தலாவிற்கு உடைமைகளை அனுப்பி வைப்பது, பதவி உயர்வு, ஆலோசனைக் கூட்டத்தில் தனியாக நாற்காலி போடுவது, அவருடைய பங்கரை சுத்தம் செய்வது, உடைமைகளை பாதுகாப்பது, ஓய்வு கொடுக்க வேண்டிய சமயத்தில் பயந்து, ஓய்வை ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்து பின்பு கடந்த 2006 ஆம் ஆண்டு ஓய்வளித்தது என எல்லாம் செயல்களும்.
சாதாரண இராணுவ வீரராக பணியாற்றத் தொடங்கிய ஹர்பஜன் சிங் உயிரிழந்த பின்பும் பணியாற்றினார் என்பதை இருநாட்டு இராணுவங்களும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன. அதோடு அவருக்கு உரிய மரியாதையையும் அளித்து இருக்கின்றன. சாதாரண இராணுவ வீரர் என்ற நிலையில் இருந்து ஓய்வு நேரத்தில் கேப்டன் அளவிற்கு அவர் பதவி உயர்வும் பெற்றிருக்கிறார். இதனால் சிக்கிம் பகுதியில் ஹர்பஜன் சிங் தங்கியிருந்த பங்கர் கோவிலாக மாற்றப்படுகிறது. ஹர்பஜன் சிங் என்ற பெயர் பின்னாளில் பாபா ஹர்பஜன் சிங் என உயர்வு பெறுகிறது.
இராணுவத்தில் இணைந்து பணியாற்றுவது ஒரு வரம் என நினைக்கும் வீரர்கள் இருக்கும் வரையில்தான் ஒரு நாடும் பாதுகாப்பாக இருக்கும். அந்த வகையில் இறந்தும் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய ஒரு வீரரின் எழுச்சி மிக்க வரலாறு மர்மத்தைக் கடந்தும் இன்றும் மதிக்கப்பட்டு வருகிறது.