'பெய்ட்டி' புயலால் சென்னைக்கு ஆபத்தா?
- IndiaGlitz, [Friday,December 14 2018]
டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் கஜா புயல் சிதறடித்து போனதன் அடையாளமே இன்னும் அழியாத நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள இன்னொரு புயலால் வட தமிழகத்தில் கனமழை, மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென் கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் தற்போது இந்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 930 கிமி தொலைவில் மையம் கொண்டுள்ளது.
பெய்ட்டி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் ஓங்கோல் மற்றும் காக்கிநாடா ஆகிய பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயலால் சென்னை உள்பட தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றாலும், டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழையும் ஒருசில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளுக்கு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.