இலங்கையில் பயங்கர குண்டுவெடிப்பு: விரிவான தகவல்
- IndiaGlitz, [Sunday,April 21 2019]
விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற இறுதி போருக்கு பின்னர் இன்று இலங்கையில் பயங்கர வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்ச் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இன்று நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பில் சுமார் 160 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
மொத்தம் 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்களில் நடந்திருக்கும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொருப்பேற்கவில்லை. கொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச், நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் உள்ள சர்ச் மற்றும் மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மூன்றுமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ சர்ச்சுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஆகிய ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது.
எதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இதுவரை தெரியவரவில்லை. ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் தேவாலயத்திற்கு வழிபாடு செய்ய வந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளதால், கிறிஸ்துவ மக்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தை சேர்ந்த 6 சதவீத கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பை கடுமையாக கண்டித்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இதுவொரு கோழைத்தனமான தாக்குதல் என்றும் இதனை கண்டிப்பதாகவும், இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இலங்கை அரசு துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் குண்டுவெடிப்பு குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.