முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சை பேச்சு: ஆ ராசாவுக்கு எழுந்த கண்டனமும், அவர் அளித்த விளக்கமும்!
- IndiaGlitz, [Saturday,March 27 2021]
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் ஒருசிலரின் பிரச்சாரங்கள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக வேட்பாளர் எழிலன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு திமுகவினர் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக எம்பி கனிமொழி அவர்கள் ’அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றும், இதை எல்லோரும் மனதில் வைத்துக் கொண்டால் இந்த சமூகத்துக்கு நல்லது என்றும், இதுதான் திராவிட இயக்கமும் பெரியாரின் விரும்பிய சமூக நீதி என்றும் ஆ ராசாவை மறைமுகமாக கண்டித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார்
முதலமைச்சர் குறித்தும் அவரது ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்வதற்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது அவரது பிறப்பையும் அவருடைய தாயாரும் இழிவுபடுத்தி பேசியது கண்டிக்கத்தக்கது என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் கூறியுள்ளார்
இந்த நிலையில் தன்னுடைய பேச்சு திரித்து, வெட்டி கூறப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரை தான் அவமதிக்கும் வகையில் எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும் ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார். அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ’திமுக பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பேச வேண்டுமென்றும் வெற்றியை நோக்கிய பாதை கண்ணியமான பாதையாக இருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பேச்சாளரும் இதனை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்
அரசியல் களத்தில் கருத்துக்கள் மோதலாமே தவிர தனிப்பட்ட விமர்சனங்கள் மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியல் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.