ரகுமானுக்கு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்குமா?
- IndiaGlitz, [Wednesday,December 14 2016]
2009ல் 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக ஒன்றுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர் ஏ.ஆர்.ரகுமான். சினிமா உலகின் மிக உயரிய சர்வதேச ஆங்கீகாரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதை முதல்முறையாக வென்ற இந்திய இசைக் கலைஞர் ரகுமான் ஆவார். இதுவரை ஆஸ்கர் வென்றுள்ள ஒரே இந்திய இசையமைப்பாளரும் அவர்தான்.
இந்நிலையில் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வாரிக் குவித்திருக்கும் நம் இசைப்புயl மீண்டும் ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து வீரர் பீலேவின் வாழ்க்கைக் கதையான 'பீலே-தி பர்த் ஆஃப் தி லெஜண்ட்' என்ற திரைப்படத்துக்காக ரகுமான் உருவாக்கிய கிங்கா' என்ற பாடலும் பின்னணி இசையும் ஆஸ்கர் விருதுகளுக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விருதுகளில் சிறந்த பாடல் (Best Original Score Song) என்ற பிரிவுக்கான நெடும் பட்டியலில் (long list) 'கிங்கா' பாடல் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்த ஆண்டு வெளியான 91 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
அதே போல் சிறந்த பின்னணி இசை (Best Original Score) என்ற பிரிவிலும் 'பீலே' படம் இடம்பெற்றுள்ளது. எனவே ரகுமானுக்கு இந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டுக்கும் இசையுலகத்துக்கும் பல பெருமைகளைத் தேடித் தந்துள்ள ஏ.ஆர்.ரகுமான் இந்த ஆண்டு மேலும் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வெல்ல IndiaGlitz சார்பில் வாழ்த்துகிறோம்.