AR ரஹ்மான் - 25 ஆண்டுகள் - 25 பாடல்கள் - இளம்பரிதி கல்யாணகுமார்

  • IndiaGlitz, [Saturday,January 06 2018]

இன்று நமது இசைநாயகன் AR ரஹ்மானின் பிறந்தநாள்.

AR ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருபத்தைந்து ஆண்டுகள் ஆகி விட்டது. இன்றும் அவரது இசை சாம்ராஜ்யம் பட்டொளி வீசி பறந்துகொண்டிருக்கிறது. இந்த 25 ஆண்டுகளில் இவர் செய்திருக்கும் சாதனையும், இசையின் இசையின் தாக்கமும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. பிறந்தநாளான இன்று ரஹ்மானின் 25 ஆண்டு பயணத்தை அவரது பாடல்கள் மூலம் திரும்பிப்பார்க்கும் ஒரு முயற்சி. 1992 முதல் 2017 வரை ஆண்டுக்கு ஒரு பாடல் என மூழ்கியெடுத்து 25 தமிழ் பாடல்களின் ஒரு சிறிய தொகுப்பு இது. இயல்பான பாடல்களைத் தவிர்த்து சில வெளிச்சம் குறைந்த பாடல்களும் இதில் அடக்கம்.

1992 - சின்ன சின்ன ஆசை - ரோஜா

கார் ஷெட் ஸ்டூடியோவுக்குள் மணிரத்னம் முதலில் கேட்ட ட்யூன். கே.பாலச்சந்தர் முதலில் கேட்டு விட்டு ‘Its going To Be Song of The Decade என்று சிலாகித்த பாடல். இரு மலைகளுக்கு நடுவே நீர்ப்பாதையில் ஒரு பரிசல் பயணிப்பதாக வரும் இந்த பாடலின் ஒரு காட்சியில் 'ஏலேலோ.. ஏலே ஏலே ஏலேலோ..' என்று பின்னணியில் ஒலிக்கத்தொடங்கும் ரஹ்மானின் குரல் அவ்வளவு அழகு. 'புது வெள்ளை மழை'யும் இன்றும் பொழிந்து கொண்டு தான் இருக்கிறது.

1993 - பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன்

AR ரஹ்மானை கிராமத்துக்குச்சூழலுக்கு அழைத்துவந்த 'கிழக்குச்சீமையிலே வெளியான இதே ஆண்டு தான் உழவனும் வெளியானது. கிழக்குச்சீமையிலே வைரமுத்துவின் கரிசல் என்றால் இது வாலியின் செம்மண். SPBயின் உரத்தில் இந்த நிலத்து மரம் இன்றும் பசுமையாகவே இருக்கிறது.

1994 - சித்திரை நிலவு - வண்டிச்சோலை சின்ராசு

இந்த பாடலை மிகவும் விருப்பமாக்க காரணம் ஜெயச்சந்திரனின் குரல். 'உன் பார்வையில் ஓராயிரம்'ல் இருந்தது போல இந்த பாடலிலும் அந்த குரலின் அழகை மீள் தயாரிப்பு செய்திருப்பார் ரஹ்மான். இந்த குரலோடு மின்மினியின் குரலும் சேரும்போது அதற்கு இசையில் வழிவிட்டு ரஹ்மான் செய்திருந்த இசைக்கோர்ப்பு கேட்பதற்கு அத்தனை அழகு. நிலா எது விண்மீன் எது என்று பேசிக்கொண்டிருக்கும்போது திடீரெண்டு கேள்வி கேட்கும் தொனியில் தொடர்வது குரல் சுதந்திரம்.

1996 - மலர்களே - லவ் பேர்ட்ஸ்

மீண்டும் சித்ராவின் குரல். தொண்ணூறுகளில் சித்ராவின் குரலை வைத்து ரஹ்மான் செய்த பல நற்காரியங்களில் இதுவும் ஒன்று. போதாதற்கு கூடவே ஹரிஹரனையும் சேர்த்துக்கொண்டு இந்த பாடல் முழுவதும் மலர்களின் ஸ்பரிசம். 'உருகியதே... எனதுள்ளம்', 'உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா' போன்ற வரிகளின் perfectionஐ எழுத்தில் அடக்க முடியாது. இதே ஆண்டு வந்த 'மெல்லிசையே' (Mr.ரோமியோ) பாடலை ஸ்வர்ணலதா, உன்னிமேனனுக்காக தவிர்க்க முடியவில்லை.

1997 - ஒருநாள் ஒரு பொழுது - அந்திமந்தாரை

அழுகையையும், சிரிப்பையும், தனிமையும், இன்மையையும் இரவு பகல் ஒளி இருட்டு என்ற எந்த பாகுபாடுமில்லாமல் ஒரு குரல் நம் செவிகளில் பாய்ச்சுமென்றால் அது நிச்சயம் ஸ்வர்ணலதாவின் குரலாகத்தான் இருக்க முடியும். காலத்தின் சூழ்நிலையால் பிரிந்து சென்றவள் பல ஆண்டுகளுக்குப்பின் யாருக்காக காத்திருக்கிறோமோ அவனையே சந்திக்க நேரும்பொழுது வார்த்தைகள் தவிக்க கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாக மாறும்போது வரும் வைரமுத்துவின் வரிகள்.

1998 - நெஞ்சினிலே - உயிரே

ஹிந்தியில் குல்சாருக்கு நிகர் நமக்கு வைரமுத்து என்பது மணிரத்னத்திற்கு தெரிந்தது போல ஹிந்தியில் லதா மங்கேஷ்கர் என்றால் தமிழில் ஜானகியம்மாவை விட்டால் ஆளில்லை என்று ரஹ்மான் உறுதி செய்த பாடல். 'ஜியா ஜலே' விட நெஞ்சினிலே நெருக்கமாகவே இருக்கிறது. தமிழுக்கு இடையில் MG.ஸ்ரீகுமாரின் மலையாளத்து வாசமும் கூடுதல் நியாயம்.

1999 - முதல் முறை கிள்ளிப் பார்த்தேன் - சங்கமம்

1999ம் ஆண்டு ஒரு கொண்டாட்டமான ஆண்டு. சங்கமம், ஜோடி,தாஜ்மஹால், காதலர் தினம், என் சுவாசக்காற்றே என அத்தனையும் சுப்பர் ஹிட் ஆல்பம். சுஜாதாவின் குரலில் இந்த 'முதல் முறை' பாடல் கொஞ்சம் அதிகமா மனதில் இடறியது. வாத்தியங்களின் இசைக்கோர்ப்புக்கு இந்த பாடல் மிகப்பெரிய முத்திரை. 'மழையுண்டு மேகமில்லை' க்கு பிறகு வரும் புல்லாங்குழலில் அதே மழை பெய்துகொண்டே இருக்கும். 'சலங்கையே கொஞ்சம் பேசு' என்று வருவது ஸ்ரீனிவாஸ் மழை. 'குளிருது குளிருது (தாஜ்மஹால்), வெள்ளிமலரே (ஜோடி) இரண்டும் கூடுதல் சந்தோஷங்கள்.

2000 - கலகலவென - ரிதம்

ஐம்பூதங்களின் சாரம் சொல்லும் ரிதம் பட பாடல்களில் ஆகாயத்துக்கான பாடல் இது. நீரின் பாயலை 'நதியே' பாடலில் சொல்வது போல மேகத்தின் பயணங்களை இசையில் பூட்டும் இந்த பாடலில் இருக்கும் மழைமேகம் சாதனா சர்கம்.

2001 - அழகே சுகமா - பார்த்தாலே பரவசம்

பாலச்சந்தருக்கு MS.விஸ்வநாதன் செய்தது போல ரஹ்மானும் தனது முதல் முதலாளி என்ற முறையில் மிக இனிதாக செய்த இசை இந்த பாடல். ஒரு பிரிவை வெவ்வேறு திசைகளிலிருந்து அதை அப்படியே மீட்டிச்செல்ல வைரமுத்து வரிகள் தூக்கிக்கொண்டு போகும். பிரிவின் வலியை தனிமையின் ஆற்றாமையை கவிதை புனைவது போல ஆர்ப்பரிக்காமல் அடிமனதிலிருந்து எழும் ஏக்கங்களை ஒருவிதமான அசாதாரண மனநிலையை உள்ளதை உள்ளபடியே இசையோடு சேர்த்து, புரிதலின் அழகை இன்றுவரை உயிர்ப்பித்து வைத்திருக்கும் பாடல் இது.

2002 - சட்டென நனைந்தது நெஞ்சம் - கன்னத்தில் முத்தமிட்டால்

சுஜாதா வார்த்தைகளாகவும், வைரமுத்து கவிதையாகவும், ரஹ்மான் இசையாகவும் சொல்வதை மணிரத்னம் ஒரு சிறுகதையாக காட்சியில் பதிவு செய்த பாடல் இது. வெள்ளைப்பூக்கள், விடைகொடு எங்கள் நாடே போன்ற பிரம்மாண்டங்கள் இருந்தாலும் இந்த சிறிய தூறல் தரும் இதத்தில் சட்டென நனையும் நெஞ்சம்.

2003 - தீக்குருவி - கண்களால் கைது செய்

LKG குழந்தையின் குரலில் தேசிய கீதம் எவ்வளவு மழலையாக இருக்குமோ அந்த மழலையின் சாயல் ஹரிணிக்கு. அந்த சாயலை தீந்தமிழின் வரிக ளில் கொட்டி ரஹ்மான் சமைத்த tongue-twister இது. ஒவ்வொரு 'தந்திரனே'வுக்கும் ஒரு அழகு இருக்கும். ஹரிணிக்கு ரஹ்மான் தந்த மிக முக்கியமான பாடல் இது.

2004 - உந்தன் தேசத்தின் குரல் - தேசம்

ரஹ்மானின் குரலுக்கு தனி அடையாளம் இருக்கிறது. மலைக்கு மீது நதியாய் இருக்கும் நீர் அருவியில் விழுந்து மீண்டும் நதியாகும். நதி-அருவி-நதி இந்த மூன்று நிலைகளுக்கும் குரல் கொடுக்க ரஹ்மானால் முடியும். அதில் ஒருவகை இந்த பாடல். 'சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா.. தமிழா வரிகள் ரஹ்மானும் வாலியும் தெரிவார்கள்.

2005 - ஆறரைக்கோடி பேர்களில் ஒருவன் - அன்பே ஆருயிரே

ரஹ்மான்-வைரமுத்து போலவே ரஹ்மான்-வாலி மிகப்பெரிய பொக்கிஷம். 'சின்னத்தாயவள் தந்த ராசாவே' என்று ரஜினியை வைத்துக்கொண்டு இளையராஜாவுக்கு எழுதிய வாலி இந்த பாட்டை ரஹ்மானுக்காக எழுதினார் . 'கண்ணீர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைக்குட்டை என்று ரஹ்மானே பாடுவது எத்தனை உத்தமம்.

2006 - நியூயார்க் நகரம் - சில்லுனு ஒரு காதல்

ரஹ்மான் குரலில் மற்றோரு பனித்துளி இந்த பாடல். பிரிவின் வலியை வாலியின் வரிகளில் சொல்லும்போது ரஹ்மானின் குரல் அதற்கேற்ப modulate ஆகும். 'சில்லென்று பூமியிருந்தும்', 'நான் இங்கே' போன்ற இடங்கள் கவனித்துக்கேட்க வேண்டிய பதங்கள். இந்த வருடத்துக்குக்கான போனஸ் வரலாறு படத்தின் 'இன்னிசை அளபெடையே'

2007 - ஏய் மாண்புறு மங்கையே - குரு

இசையை நகர்த்தி சொல்லவேண்டியது தான் வரிகள் என்று திண்ணமாய் நம்புபவர் மணிரத்னம். அந்த நம்பிக்கையின் மிகப்பெரும் சாட்சி இந்த பாடலின் வரிகளும் இசையும். ஸ்ரீனிவாசும், சுஜாதவும் சேர்ந்து இந்த பாடல் முழுவதும் சக்தி குடும்பத்து சுஜாதாவை குரலில் செதுக்கியிருப்பார்கள். குரலின் உளி - வைரமுத்து, ஒலி - ரஹ்மான்

2008 - முழுமதி - ஜோதா அக்பர்

ஸ்ரீனிவாஸ் எப்பபோழுதுமே ரஹ்மானின் செல்லப்பிள்ளை. ஆகச்சிறந்த மெலோடிக்களில் ஸ்ரீநிவாஸின் பங்கு நிச்சயம் இருக்கும். அப்படியொரு பசுந்தளிர் இந்த 'முழுமதி', இந்த பாடலின் instrumental versionக்கு புல்லங்குழலை பயன்படுத்திய ரஹ்மான், கூடுதல் அழகு

2009 - குறு குறு கண்களிலே - couples retreat

தமிழ் படங்கள் வராத ஆண்டு இந்த 2009. இருந்தாலும் ஆங்கிலப்படத்தில் தன கையால் எழுதி இசையமைத்த இந்த பாடல் தமிழில் வரவு தான். இந்த பாடலை, போர்வையை போர்த்திக்கொண்டு காதலியோடு அதிகாலை காதல் பேசும் காதலனின் குரலில் பாடியிருப்பார் ரஹ்மான்.

2010 - காட்டுச்சிறுக்கி - ராவணன்

எப்பொழுதுமே பாடல்களின் தேவையை நன்குணர்ந்த இயக்குனர் மணிரத்னம். உசுரே போகுதே போன்ற பாடல்கள் இருந்தாலும் இந்த பாடலையும் வீராவின் கதை சொல்ல பயன்படுத்தியிருப்பார் மணிரத்னம். அனுராதா ஸ்ரீராமின் தவிர்க்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. இதன் ஹிந்தி பதிப்பை சமீபத்தில் ஸ்ருதிஹாசனின் குரலில் மீள்வெளியீடு செய்திருந்தார் ரஹ்மான்

2011 - ஓ நாதான் பிரிந்தே (Naadaan Parinde) - Rockstar

2011ல் தமிழ்ப்பாடல்களாக எந்த பாடலும் வெளியாகவில்லை. அதற்கு மொத்த ஈடாக ஹிந்தியில் rockstar படம் வெளியானது. அதுவரை இம்தியாஸுக்கு இசையமைத்துவந்த ப்ரீத்தத்துக பதிலாக ரஹ்மான் இசையமைத்த ஆல்பம். சிந்து பைரவி KJ யேசுதாஸ், சங்கராபரணம் SPB போல இந்த படத்துக்கு மொஹித் சவுகான். 'கர் ஆஜா' என்று ரஹ்மான் பாடும்போதெல்லாம் சுந்ததிரப்பறவை வீடடையும்.

2012 - மூங்கில் தோட்டம் - கடல்

வைரமுத்துவின் கவிதைக்கு உயிரூட்டிய இசை. 'இது போதும் எனக்கு' என்று கவிதையிலிருந்து இசைக்குதோதுவான வரிகளை வைரமுத்து இல்லாமலே தேர்வு செய்து அதை பாடலாக்கியிருந்தார் ரஹ்மான். பல நாட்கள் கழித்து ஹரிணியை மீண்டும் அழைத்து வந்த பாடல்.

2013- நேற்று அவள் இருந்தாள் - மரியான்

பிரிவில் வாடும் காதலர்கள் தங்களுக்குள் இருக்கும் நினைவுகளை அடுக்குககளாக சொல்லும் பாடல். வாலி மறைந்த பிறகு வெளியான வாலி-ரஹ்மான் பாடல் இது. வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா என்று விஜய் பிரகாஷ் பாடும்பொழுது வாலி-ரஹ்மான் இணைந்த நேற்றுகளை மீண்டும் வரச்சொல்வது போல தோன்றும்.

2014 - இதயம் - கோச்சடையான்

கடினமான பாடல்களை சின்மயிக்கு கொடுத்து 'சம்பெஸ்தாணு' என்று திட்டுவது ரஹ்மானின் வெளியில் தெரியாத அழகிய இயல்புகளில் ஒன்று. அப்படியொரு வித்தியாசமான பாடல். ஸ்ரீநிவாஸையும் இணைத்து 'யானோ நின்னை மறக்கிலேன்' என்று உச்சத்தை இலகிய குரலில் ஒலிக்க வைத்தார் ரஹ்மான்.

2015- நானே வருகிறேன் - ஓ காதல் கண்மணி

ரஹ்மானின் சமீபகாலத்து petடான சத்யப்ரகாஷ் ரஹ்மானுக்கு பாடிய முதல் பாடல். 'சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே' என்று பாடுவதாகட்டும், சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்லத்தெரியாதே' என்று பாடுவதாகட்டும் அதில் ரஹ்மானின் விரல்கள் தெரியும். தொடக்கத்தில் 'சொல்லுதே' என்ற ஒரு சொல்லில் 'ல்' எனும் ஒற்றெழுத்தை ஒலிக்க வைக்கும் ரஹ்மானின் அழகியலுக்கு ஷாஷா பொருத்தமான தேர்வு. 'நானே வருகிறேன்'ல் 'நானே' ஒரு வளைந்தோடும் நதி.

2016 - அவளும் நானும் - அச்சம் என்பது மடமையடா

'அச்சம் என்பது மடமையடா' தான். அந்த முழுவாழை இசைவிருந்தின் பதம் பார்க்கப்படும் சோற்றுப் பருக்கை தான் இந்த 'அவளும் நானும்'. ரம்மியம் என்பதன் பொருள் இந்த பாடலில் ஒலிக்கும் விஜய் யேசுதாஸின் குரல் தான். வேறொரு குரலை நினைத்துப்பார்க்க முடியாத அவளில் அந்த பாடலின் குரல் இன்னும் அகலாது இருக்கிறது.

2017 - வான் வருவான் - காற்று வெளியிடை

ரஹ்மானின் சமீபத்திய பழைய ரஹ்மான். ஷாஷாவின் குரல் வைரமுத்துவின் வரிகள் என்று ரஹ்மானின் வெள்ளை நிறத்தில் வந்த பாடல். இந்த 25 வெறும் எண் தான். ரஹ்மானின் பாடல்களில் சிறந்தவையென பிரித்து எடுப்பது நனையாமல் பெருங்கடலிலை நீந்தி வருவது போலாகும்.இன்னும் இந்த இசைப்பெருங்கடல் ஆர்ப்பரிக்க இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

More News

கிரிக்கெட் மைதானத்திற்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய ரஜினி-கமல்

நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெறும் நட்சத்திர கலைவிழாவில் கலந்து கொள்ள தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் சென்றுள்ளனர்.

அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய அறிக்கை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் வருகையை உறுதி செய்தார். வெகுவிரைவில் கட்சியின் பெயர், சின்னம், கொடி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்

மாடி மேல் இருக்கும் கமலுக்கு மக்கள் கஷ்டம் புரியாது: அமைச்சர் ஜெயகுமார்

'மாடி மேல் இருந்து பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய இயலாது

ரஜினியின் ஆல்டைம் ஃபேவரேட் கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?

மலேசியாவில் தென்னிந்திய நட்சத்திர கலைவிழா இன்று நடந்து வரும் நிலையில் நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டிகளும் இந்த விழாவில் ஒரு பகுதியாக உள்ளது.

ரஜினி அரசியல் குடும்ப அரசியலாகிவிடும்: அமீர் அச்சம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதில் இருந்தே அரசியல்வாதிகள் மட்டுமின்றி கோலிவுட் திரையுலகினர்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.