எஸ்பிபிக்காக மீண்டும் கூட்டுப்பிரார்த்தனை: தேதி, நேரம் அறிவிப்பு

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. அவரது உடல்நிலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவலைக்கிடமாக இருந்ததையடுத்து அவருக்காக திரை உலகினர் மட்டுமின்றி உலகிலுள்ள ஒட்டுமொத்த இசை ரசிகர்கள் கடந்த 20ஆம் தேதி கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த கூட்டுப் பிரார்த்தனையின் பலனாக தற்போது மயக்க நிலையிலிருந்து 90% எஸ்பிபி அவர்கள் மீண்டுவிட்டதாகவும், அவர் தனது மனைவி மற்றும் மகனை அடையாளம் கண்டு அவர்களின் நலன் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் கடந்த சில நாட்களாக எஸ்பிபி அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அவரது உடல்நிலை சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது எஸ்பிபி அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக மீண்டும் ஒரு கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 27-ஆம் தேதி அதாவது நாளை மாலை 6 மணி முதல் 6.05 வரை இந்த கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும் என்றும் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் மொழி, இனம், மதம் கடந்து அனைவரும் ஒன்று கூடி நம் எஸ்பிபி அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரார்த்தனைகள் பலனாக எஸ்பிபி அவர்கள் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.