விஜய் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த வழக்கறிஞர்

  • IndiaGlitz, [Monday,June 25 2018]

தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கடந்த 21ஆம் தேதி வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் விஜய் புகை பிடித்தவாறு உள்ள காட்சிக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் டுவிட்டில் இருந்து தனியார் செய்தி தொலைக்காட்சியின் விவாதம் வரை இந்த விஷயம் அலசப்பட்டது. இந்த நிலையில் விஜய் மீது வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் இதுகுறித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

சினிமா நடிகர்களை பலர் தங்களின் ரோல் மாடலாகப் பின்பற்றிவரும் நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்தாகவும், இந்த காட்சியை பார்க்கும் ஏராளமான இளைஞர்கள் சிகரெட் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார். இதனால் இளையதலைமுறையினர் சீரழிவதை தடுக்க இயக்குனர் மற்றும் விஜய் ஆகியோரிடம் பேசி அக்காட்சியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சினிமாவில் புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் சிகரெட் கம்பெனிகளை இழுத்து மூட புகார் அளிக்கலாமே என்று நெட்டிசன்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.