சென்னை மெரீனாவில் மாணவர்கள் மத்தியில் ஹீரோவான காவலர்

  • IndiaGlitz, [Friday,January 20 2017]

சென்னை மெரீனாவில் கடந்த நான்கு நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் வரலாறு காணாத வகையில் அனைத்து தரப்பினர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக நடந்து வருகிறது., இந்தியாவிலேயே இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம் எந்தவித வன்முறையும் இதுவரை நடைபெற்றது இல்லை.

இந்நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு காவல்காக்கும் காவல்துறையினர்களும் பொறுப்புடன் செயல்பட்டு வருகிறனர். காவல்துறையினர்களாக இருந்தாலும் அவர்களும் அடிப்படையில் தமிழர்கள் என்பதால் இந்த போராட்டத்திற்கு மனதளவில் ஆதரவு தந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென இன்று காலை மெரினாவில் பாதுகாப்பிறகு சீருடையில் இருந்த காவலர் ஒருவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்களின் மத்தியில் மைக் பிடித்து பேசினார். அவர் கூறியதாவது: ''இது ஒரு துவக்கம்தான். இன்னும் நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசுவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. காவல்துறையில் இருக்கும் எங்களுக்கும் உணர்வு இருக்கிறது. இங்கு சீருடை இல்லாமல் நிறைய காவல்துறைகாரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மண்ணில்தான் நேதாஜியும் பிறந்தார். காந்தியும் பிறந்தார்.

காந்தி பிறந்த மண்ணு என்று ஓட்டு கேட்க வந்த மோடிக்கு அப்போது தெரியவில்லையா? விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். தமிழனுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. முன் வைத்த காலை பின் வைக்க மாட்டோம். உயரதிகாரிகள் கொடுத்த பிரச்ஷர் காரணமாக தற்போது இந்த காவல்துறைகாரர்கள் என்னை கூப்பிடுகின்றனர். என் சொந்த ஊர் மதுரை. ராமநாதபுரம்தான் என்னுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் இல்லாமல் நாங்கள் எங்கு பஞ்சம் பிழைக்க செல்வது. நாங்கள் அமெரிக்காவா செல்ல முடியும். எங்களால் பேச முடியாமல் இருக்கிறோம். ஜல்லிக்கட்டு வெற்றி பெறும். இனி அடுத்தது மண் கொள்ளையை நாம் தடுக்க வேண்டும் '' .

இவ்வாறு உணர்ச்சிபூர்வமாக பேசிய அந்த காவலரை உடனடியா காவல்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். மாணவர்கள் மத்தியில் காவலர் ஒருவரே போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுத்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.