போலீஸ் கெடுபிடியால் 65 வயது தந்தையை 1 கிமீ தோளில் தூக்கி சென்ற மகன்: நெகிழ்ச்சி வீடியோ

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இரண்டாவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை இருக்கும் என்றும் இந்த முறை ஊரடங்கு உத்தரவை கடுமையாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் அவசியமின்றி சாலைகளில் நடமாடுபவர்களையும், வாகனங்களில் வருபவர்களையும் கடுமையாக எச்சரித்து தண்டனை கொடுத்தும் அபராதம் விதித்திருக்கின்றனர். இருப்பினும் மருத்துவ காரணங்களுக்காக வருபவர்களை மனிதாபிமானத்துடன் போலீசார் அணுகலாம் என்ற கோரிக்கை அனைவரிடமும் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள புனலூர் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 65 வயது தந்தை உடல்நலமில்லாமல் இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்திருந்தார். அவர் டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆட்டோவை அவரது மகன் கொண்டு வந்திருந்தார்.

ஆனால் அங்கிருந்த கேரள போலீசார் ஆட்டோவை மருத்துவமனை அருகில் வர அனுமதிக்கவில்லை என தெரிகிறது. ஒரு கிலோமீட்டருக்கு முன்பே ஆட்டோவை தடுத்து போலீஸார் நிறுத்திவிட்டதால் வேறு வழியின்றி அவரது மகன் தனது தந்தையை ஒரு கிலோமீட்டர் தோளில் தூக்கி ஆட்டோ இருக்கும் இடம்வரை நடந்து சென்றார். அவருக்குப்பின் அவரது தாயாரும் ஓடி வந்து கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

65 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் போது ஒருசில விதிமுறைகளை தளர்த்தி அவருக்காக ஆட்டோவை மனிதாபிமானத்துடன் போலீசார் அனுமதித்து இருக்கலாம் என்று நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.