'வாரிசு' படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ்.. சிக்கல் மேல் சிக்கல் வருவதால் அதிர்ச்சி
- IndiaGlitz, [Thursday,November 24 2022]
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் வெளியிட அம்மாநில தயாரிப்பாளர்கள் சங்கம் பிரச்சனை செய்த நிலையில் தற்போது தான் அந்த பிரச்சனையை சரி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ’வாரிசு’ படக்குழுவினர்களுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’வாரிசு’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’வாரிசு’ படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதுகுறித்த பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் உரிய அனுமதி இல்லாமல் யானை மற்றும் குதிரைகளை அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக தெரிகிறது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது யானையை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வருவதற்கான அனுமதி மட்டுமே படக்குழுவினர்களிடம் இருந்ததாகவும் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்த விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்றும் தெரியவந்தது.
இந்த நிலையில் ’வாரிசு’ படக்குழுவிற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய அனுமதி இன்றி யானையை படப்பிடிப்புக்கு பயன் பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் விளக்கம் அளிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.