ஒட்டுமொத்த நாடும் எதிர்த்த ஒலிம்பிக் காதல்… தேசங்களை கடந்து வென்ற சுவாரசியம்!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜப்பான் நாட்டில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ஒட்டி, இதற்குமுன்பு ஒலிம்பிக் போட்டிகளுக்கு இடையே நடைபெற்ற சில சுவாரசியச் சம்பவங்கள் தற்போது மீண்டும் வெளிச்சம் பெற்று வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 1956 ஆம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கியா நாட்டை சேர்ந்த வீராங்கனை ஒருவருக்கும் அமெரிக்க வீரர் ஒருவருக்கும் மலர்ந்த காதல் தேசங்களைக் கடந்து வெற்றிப்பெற்ற கதை தற்போது மீண்டும் பேச்சப்பட்டு வருகிறது.

செக்கோஸ்லோவாக்கியா நாட்டில் மருத்துவம் படித்து வந்த மாணவி லூக்கா ஃபிகொடோவா. இவர் 6 அடி உயரத்தில் கம்பீரமாக இருப்பாராம். கூடவே வட்டெறியும் (Discus Throw) விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டுள்ளார். இவரது திறமையைப் பார்த்து வியந்துபோன பயிற்சியாளர்கள் இவருக்கு திறமையாகப் பயிற்சி அளித்து அதோடு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள வைத்துள்ளனர்.

அப்படி இவர் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அந்நாட்டிற்கு தங்கத்தை வென்று கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கடந்த 1956 ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்றது. ஆனால் இந்த வெற்றியைத் தொடர்ந்து லூக்கா செய்த ஒரு காரியம் செக்கோஸ்லோவாக்கியா நாட்டு அரசாங்கத்தையே கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. அதோடு மீண்டும் தன்னுடைய நாட்டிற்கே வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

இந்தச் சம்பவம்தான் தற்போது சோஷியல் மீடியாவில் சுவாரசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதே ஆஸ்திரேலியா ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் இருந்து வந்து “ஹெமர் த்ரோ“ பிரிவில் தங்கம் வென்றவர் ஹரொல்ட் கானொலி. இவருக்கும் நம்முடைய லூக்காவிற்கும் இடையே அளவில்லா காதல். இந்தப் போட்டிக்கு நடுவில் இவர்கள் கையைக்கோர்த்துக் கொண்டு ஒட்டுமொத்த நகரத்தையும் சுற்றி வருகின்றனர்.

ஆனால் போட்டி முடிந்து பிரிந்து செல்ல வேண்டுமா? என வருந்திய அந்த ஜோடி ஒருக்கட்டத்தில் அங்கேயே திருமணத்தையும் நடத்தி இருக்கின்றனர். இந்தச் சம்பவம் அந்தக் காலக்கட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது. இதனால் லூக்காவை எச்சரித்த செக்கோஸ்லோவாக்கியா தன்னுடைய நாட்டிற்கு மீண்டும் வரவேண்டாம் என்றும் அச்சுறுத்தி இருக்கிறது. அதோடு தன்னுடைய நாட்டின் சார்பாக அவர் மீண்டும் விளையாடக்கூடாது எனவும் கூறி இருக்கிறது.

இதனால் தன்னுடைய சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியாத லூக்காவை, ஹரொல்ட் அமெரிக்காவிற்கே அழைத்து சென்று விடுகிறார். ஒரு காதலால் சொந்த நாட்டை இழந்து, விளையாட்டை மறக்க வேண்டுமா? என்ற கேள்வி லூக்காவிற்கு வருகிறது. இந்த நிலைமையை புரிந்து கொண்ட அமெரிக்கா அவருக்கு தன்னுடைய நாட்டின் சார்பாக விளையாட அனுமதி அளிக்கிறது.

இதனால் அமெரிக்கா சார்பாக கடந்த 1960, 1964, 1968, 1972 எனப் பல முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தருகிறார். மேலும் கடந்த 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற அமெரிக்காவை இவர்தான் கொடி தாங்கி வழிநடத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை சுவாரசியம் கொண்ட ஒலிம்பிக் காதல் தற்போது தேசங்களை கடந்து நட்பை வளர்த்து இருக்கிறது.